அயோத்தி ராமர் கோவில் நன்கொடை திருட்டு முறைகேட்டில் எந்த ஒரு துறவிக்கும் தொடர்பில்லை என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மற்றும் வழங்கிய நன்கொடை திருடப்பட்டதாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவிலை நிர்வகித்து வரும் ராம ஜென்மபூமி அறக்கட்டளையை சேர்ந்த ஊழியர்கள் உட்பட 8 பேர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேட்டை எழுந்த புகாரை சிறப்பு விசாரணை குழு விசாரித்து வருகிறது.
இதில் தொடர்புடைய கூடுதல் நபர்கள் மற்றும் சொத்துக்களை கண்டறிய முழு நிதிப் பரிவர்த்தனைகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சிறப்பு விசாரணை குழுவின் முதற்கட்ட அறிக்கையில் இந்த முறைகேட்டில் எந்த ஒரு துறவிக்கும் தொடர்பில்லை என்பது உறுதியாகி உள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "சிறப்பு விசாரணை குழுவின் முதற்கட்ட அறிக்கையின்படி, நன்கொடை முறைகேட்டில் எந்தவொரு சாதுவுக்கோ அல்லது துறவிக்கோ தொடர்பிருப்பது கண்டறியப்படவில்லை" என்று தெரிவித்தார்
மேலும், சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் உத்தரபிரதேசத்தின் பிம்பத்தை சீர்குலைக்க முயல்வதாக யோகி குற்றம் சாட்டினார்.
"எதிர்க்கட்சிகளின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்புக்கும் எதிரானது. இது அம்பேத்கர் மற்றும் சனாதன உணர்வுகளை இழிவுபடுத்தும் செயலாகும்."
ஒரு காலத்தில் ஸ்ரீ ராமர் மற்றும் கிருஷ்ணரின் இருப்பையே கேள்வி கேட்டவர்கள், இன்று நம்பிக்கையைப் பற்றிப் பேசுகிறார்கள். அயோத்தியின் வீதிகளையும் சரயு நதியையும் ரத்தத்தால் கறைபடுத்திய பாவத்தை செய்தது சமாஜ்வாதி அரசுதான்" என்று சாடினார்.