பீகார் மாநிலத்தை சேர்ந்த சுயேச்சை எம்.பி. பப்பு யாதவ், அயோத்தி ராமர் கோவில் நன்கொடை திருட்டை விமர்சிக்கும் விதமாக கடந்த பாராளுமன்ற கூட்டத்தின்போது சாமியார் வேடத்தில் உண்டியலுடன் வந்திருந்தார்.
அவருடன், நன்கொடை திருட்டை கண்டித்து எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற வளாகத்தில் நூதன போராட்டம் நடத்தின.
இதற்காக பப்பு யாதவ், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் பப்பு யாதவ் சனாதன தர்மத்தை அவமதித்ததாக கண்டனம் எழுந்தது.
இந்நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தபோது பப்பு யாதவ் மீது நபர் ஒருவர் காலணி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாக்குதல் நடத்திய நபர் உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாகரைச் சேர்ந்த சுமித் என கண்டறியப்பட்டது. அவர் அங்கிருந்தவர்களால் உடனடியாக பிடிக்கப்பட்டு டெல்லி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
தாக்குதல் நடத்தியவர் தன்னைக் கத்தியால் குத்திக் கொல்லத் திட்டமிட்டு வந்ததாகப் பப்பு யாதவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அமித் இடம் இருந்த கத்தி கைப்பற்றப்பட்டு காவல்துறையிடம் வழங்கப்பட்டுள்ளது.
பப்பு யாதவுக்குத் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் இருந்தும், டெல்லி காவல்துறை போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்றும், தாக்குதலின் போது மெத்தனமாகச் செயல்பட்டதாகவு காங்கிரஸ் தலைவர் பவன் கேரா ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள டெல்லி காவல்துறை, தாக்குதலின் பின்னணி குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலுக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட நன்கொடை பணம், தங்கம் உள்ளிட்டவை கோடிக்கணக்கில் சுருட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
விசாரணையில் அங்குள்ள ஊழியர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது. இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். 77 லட்சம் ரூபாய் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த முறைகேடுகளுக்கு தார்மிக பொறுப்பேற்று, ராம ஜென்ம பூமி ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்த சம்பத் ராயிடமும், போலீசார் விசாரணை நடத்தினர்.
ராமர் கோவில் நன்கொடை திருட்டுக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.