மத்திய ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் ஏற்பட்ட எபோலா வைரஸ் நோய் பரவலை, உலக சுகாதார அமைப்பு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது.
இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் எபோலா வைரஸ் நோய் தொடர்பான கண்காணிப்பு மற்றும் தயார்நிலை நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
எபோலாவுக்கான நாட்டின் தயார்நிலை மற்றும் பதில் நடவடிக்கைகளை மதிப்பீடு செய்வதற்காக, மத்திய சுகாதார செயலாளர் தலைமையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார செயலாளர்களுடன் உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது .
அதில் மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் கண்காணிப்பு மற்றும் தயார்நிலை நடவடிக்கைகளை மத்திய அரசு முனைப்புடன் வலுப்படுத்தியுள்ளது. அனைத்து மட்டங்களிலும் தயார்நிலையை உறுதி செய்யுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், எபோலா வைரஸ் பரவல் காரணமாக காங்கோ, உகாண்டா, தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணம் செய்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.