இந்தியா

Video: வெல்லம் ஊட்டிய ஆட்டோ ஓட்டுனரை மிதித்து கொன்ற யானை - பாகன் மீது வழக்கு!

பாகன் அடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த யானை ஆக்ரோஷத்தின் உச்சத்திற்கு சென்றது.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், சாலையில் நின்றிருந்த யானை ஒன்றுக்கு அன்போடு வெல்லம் ஊட்ட முயன்ற ஆட்டோ ஓட்டுநர், அந்த யானையால் கொடூரமாக மிதித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை நகரின் ராஜ் நகர் காவல் நிலையத்திற்கு நேர் எதிரே அரங்கேறிய இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

வெல்லம் ஊட்டியதால் ஆபத்து

இறந்துபோன நபர் இந்தூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விஜய் ஹோல்கர் (49) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சனிக்கிழமையன்று சாலையில் யானை நிற்பதைக் கண்ட அவர், அதற்கு ஏதேனும் உணவளிக்க விரும்பியுள்ளார்.

அதன்படி, கையில் வெல்லக் கட்டிகளுடன் யானையின் அருகில் சென்று அதை ஊட்ட முயன்றுள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக அந்த யானை திடீரென கோபமடைந்து, தனது தும்பிக்கையால் விஜய் ஹோல்கரை பலமாகத் தள்ளி கீழே வீழ்த்தியது.

பாகனின் அஜாக்கிரதை

விஜய் ஹோல்கர் கீழே விழுந்ததைக் கண்டு பதற்றமடைந்த யானையின் பாகன் உமேஷ் கோஸ்வாமி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர நினைத்தார்.

ஆனால், அவர் கையாண்ட விதம் நிலைமையை மேலும் மோசமாக்கியது. யானையைத் அமைதிப்படுத்துவதற்குப் பதிலாக, தனது கையில் இருந்த தடியால் யானையின் தலைப்பகுதியில் பலமாக அடித்தார்.

பாகன் அடித்த அடியில் ஏற்பட்ட வலியால் நிலைதடுமாறிய அந்த யானை, முற்றிலும் தனது கட்டுப்பாட்டை இழந்து ஆக்ரோஷத்தின் உச்சத்துக்கே சென்றது.

தும்பிக்கையால் வீச்சு

கட்டுப்பாட்டை இழந்த யானை, கீழே விழுந்து தவித்துக் கொண்டிருந்த விஜய் ஹோல்கரை மீண்டும் தனது தும்பிக்கையால் சுருட்டி காற்றில் தூக்கி வீசியது.

அத்துடன் நிறுத்தாமல், கீழே விழுந்த அவரது வயிற்றுப் பகுதியின் மீது தனது கால்களால் பலமாக மிதித்துத் துவைத்தது. அங்கிருந்தவர்கள் அலறியடித்தபடி ஓடிவந்து, பெரும் போராட்டத்திற்குப் பிறகு அவரை மீட்டனர்.

சிகிச்சை பலனின்றி மரணம்

கடுமையான காயங்களுடன் கிடந்த விஜய் ஹோல்கர் உடனடியாக அருகில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு முதலுதவி வழங்கப்பட்ட போதிலும், நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால் உடனடியாக ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவசரப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விஜய் ஹோல்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.

யானையின் மிதியால் அவரது உடலின் முக்கிய உட்புற உறுப்புகள் கடுமையாகச் சிதைந்து, கடுமையான காயங்கள் ஏற்பட்டதே மரணத்திற்குக் காரணம் என்று பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர் .

காவல்துறை விசாரணை மற்றும் வழக்குப்பதிவு

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சில ஆன்மீகத் துறவிகள் தங்களது சமூக நிகழ்ச்சி ஒன்றிற்காக இந்த யானையை நகருக்குள் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.

அந்த யானையை நகரின் பல்வேறு தெருக்களுக்குக் கூட்டிச் சென்று, மக்களிடம் யாசகம் பெற வைத்துள்ளனர்.

பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகன நெரிசல் மிகுந்த நகர்ப்புற பகுதிக்கு யானையை அழைத்து வருவதற்கு முன்பாக, வனத்துறையிடமிருந்து முறையான அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், யானையைச் சரியாகப் பராமரிக்காமல் அஜாக்கிரதையாகச் செயல்பட்டு ஒருவரின் மரணத்திற்குக் காரணமான பாகன் உமேஷ் கோஸ்வாமி மீது காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகள் 106 மற்றும் 291 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.