தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி பகுதியில் ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் சத்வார் கிராம பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது.
அப்போது, அந்த வழியாக வந்த டேங்கர் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ முற்றிலும் நசுங்கியது. மேலும் ஆட்டோவில் பயணித்தவர்களில் 6 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
ஆட்டோவில் இருந்தவர்கள் அனைவரும் கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் ராஜகிரி கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றும் இதில் உயிரிழந்தவர்களில் ரேகா, ஸ்ரீதேவி, கவிதா, ரேஷ்மா, நிகிதா மற்றும் தேவதாஸ் ஆகியோர் என்பது தெரியவந்தது.
வேலை முடிந்து ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 5 பெண்கள் உள்ளிட்ட 6 கூலித் தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதியதில் படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.