இந்தியா

ஹரியானாவில் ஸ்ரீநகர் பஸ் மீது கல்வீச்சுத் தாக்குதல்: ஓட்டுநரை ‘பயங்கரவாதி’ எனத் திட்டியதாகப் புகார்!

இது மதரீதியான அல்லது திட்டமிட்ட குரோதத் தாக்குதல் அல்ல. பார்க்கிங் தொடர்பான தகராறே இதற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.

டெல்லியிலிருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசுப் பேருந்து மீது, ஹரியானாவின் கர்னால் மாவட்டத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதி அருகே மர்ம நபர்கள் கல் மற்றும் செங்கற்களால் பயங்கரத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியதுடன், முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

‘பயங்கரவாதி வாகனம்’ என முழக்கம் - ஓட்டுநர் புகார்

நேற்று இரவு 10:30 மணியளவில், ஜம்மு காஷ்மீர் பதிவு எண் கொண்ட அந்தப் பேருந்து, நிலோகேரி பகுதியில் உள்ள 'டிவைன் ஸ்டார்' தபா அருகே இரவு உணவுக்காக நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து பேருந்து ஓட்டுநர் வக்கார் கூறுகையில், "நாங்கள் பேருந்தை நிறுத்திய ஒரு நிமிடத்திற்குள், அங்கிருந்த பலேனோ காரில் வந்த நபர்கள், ‘பயங்கரவாதி வாகனம், இங்கிருந்து வண்டியை எடு’ என்று கத்தினர். நான் அதைத் தட்டிக்கேட்டபோது, அவர்கள் பேருந்தின் முன் பக்கக் கண்ணாடியை உடைத்து, நம்பர் பிளேட்டை சேதப்படுத்தி, என்னையும் தாக்கினர்.

மேலும், ஜம்மு காஷ்மீர் வண்டி ஏன் ஹரியானாவிற்குள் வந்தது எனக் கேட்டு, பேருந்தைக் கொளுத்தி விடுவதாகவும், எங்களைச் சுட்டுக் கொன்றுவிடுவதாகவும் மிரட்டினர்" என்று அதிர்ச்சியூட்டும் புகாரை தெரிவித்துள்ளார்.

முதல்வர் உமர் அப்துல்லா கடும் கண்டனம்

இந்தச் சம்பவம் குறித்து ஜம்மு காஷ்மீர் நேஷனல் கான்பரன்ஸ் தலைவர் இம்ரான் நபி தார், இது காஷ்மீரிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட "வெறுப்புக் குற்றம்" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்துப் பதிவிட்டுள்ள ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, "இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவம் எக்காரணம் கொண்டும் நடந்திருக்கக் கூடாது. நயாப் சைனி தலைமையிலான ஹரியானா அரசும், ஹரியானா காவல்துறையும் குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருப்பதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

காவல்துறை விளக்கம் - பார்க்கிங் தகராறா?

சமூக வலைத்தளங்களில் இது காஷ்மீரிகளுக்கு எதிரான தாக்குதல் என்ற கோணத்தில் விவாதங்கள் எழுந்த நிலையில், ஹரியானா காவல்துறை இதற்கு விளக்கம் அளித்துள்ளது. பூதானா காவல் நிலைய அதிகாரி விபின் குமார் கூறுகையில், "இது மதரீதியான அல்லது திட்டமிட்ட குரோதத் தாக்குதல் அல்ல. முதற்கட்ட விசாரணையில், கார் மற்றும் பேருந்தை நிறுத்துவது மற்றும் வழிவிடுவது தொடர்பான தகராறே இதற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது" என்றார்.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யூனிஸ்புரா கிராமத்தைச் சேர்ந்த மோஹித் மற்றும் சவான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பேருந்து பயணி ஒருவருக்கும், காரில் வந்தவர்களுக்கும் இடையே மதுபோதையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதிலேயே, அவர்கள் அருகில் கிடந்த கல் மற்றும் செங்கற்களைக் கொண்டு பேருந்தைத் தாக்கியுள்ளனர் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

தன்னிச்சையான வழக்குப்பதிவு

பாதிக்கப்பட்ட பயணிகள் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வப் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என்றாலும், காவல்துறை இந்த விவகாரத்தைத் தன்னிச்சையாகக் கையில் எடுத்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இதற்கிடையே, பேருந்து சேதத்திற்கான இழப்பீட்டைத் தருவதாகக் காரில் வந்த இளைஞர்கள் ஒப்புக்கொண்டதை அடுத்து இருதரப்பிலும் சமரசம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT