அசாம் மாநிலத்தின் 11 மாவட்டங்களை வெள்ளம் கடுமையாக பாதித்துள்ளது. நேற்று (புதன்கிழமை) ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்ததுடன், 6.53 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த சில நாட்களுக்கு மேலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், நிலைமை சீரடைவதற்கான அறிகுறிகள் குறைந்துள்ளன.
அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ASDMA) தகவலின்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் 24 மணி நேரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து, இந்த ஆண்டு வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இதுவரை 41-ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக குவஹாத்தியில் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
சிவசாகர் மற்றும் ஜோர்ஹாட் மாவட்டங்களில் தலா மூன்று பேரும், சாரைடியோவில் இருவர், கார்பி ஆங்லாங் மற்றும் தேமாஜியில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று கனமழைக்கான 'ஆரஞ்சு எச்சரிக்கை' விடுத்து, மக்களை பேரிடருக்கு தயாராக இருக்குமாறு அறிவுறுத்தியது. மேலும், சில இடங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் அடுத்த நான்கு நாட்களுக்கு 'மஞ்சள் எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது.
சிவசாகர், சாரைடியோ, தேமாஜி, திப்ருகர், கோலாகாட், ஹோஜாய், ஜோர்ஹாட், காம்ரூப், காம்ரூப் பெருநகரம், கார்பி ஆங்லாங் மற்றும் நாகான் ஆகிய மாவட்டங்களில் 6,53,100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தினசரி வெள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
சிவசாகர் மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது; அங்கு சுமார் நான்கு லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாரைடியோவில் சுமார் 1.11 லட்சம் பேரும், ஜோர்ஹாட்டில் 97,000-க்கும் மேற்பட்டோரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை வரை, 12 மாவட்டங்களில் சுமார் 5.65 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
அறிக்கையின்படி, அசாம் முழுவதும் 939 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன; 24,897.27 ஹெக்டேர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன. மாநில நிர்வாகம் 10 மாவட்டங்களில் 487 தங்குமிடங்கள் மற்றும் நிவாரண விநியோக மையங்களை இயக்கி வருவதாகவும், இதன் மூலம் 24,418 பேருக்குப் பராமரிப்பு மற்றும் உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
ராணுவம், NDRF, SDRF, தீயணைப்பு மற்றும் அவசரச் சேவைப் பிரிவு, காவல்துறை மற்றும் சிவில் அமைப்புகள் ஆகியவை சாரைடியோ, கோலாகாட், ஜோர்ஹாட், கார்பி ஆங்லாங் மற்றும் சிவசாகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 8,500-க்கும் மேற்பட்ட மக்களை மீட்டுள்ளதாக அது மேலும் தெரிவித்தது.