அசாமில் நாளை சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் நேற்று முன் தினத்துடன் இறுதிக்கட்ட பிரசாரம் முடிந்தது.
இந்த தேர்தலில் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான ஆளும் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிராக இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தி பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின சமூகங்களை அவமதித்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அசாம் முதலமைச்சரின் இந்தக் கருத்தை பிரதமர் நரேந்திர மோடி ஆதரிக்கிறாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
செய்தியாளர்களிடம் அசாம் முதலமைச்சர் சர்மா பேசும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் பேசும் பிஸ்வா, "மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வயதாகிவிட்டது. அவர் பைத்தியக்காரனை போன்று பேசுகிறார்." என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹிமாந்தா பிஸ்வாவின் மனைவி ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, இந்தியா என மூன்று நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பதாகவும் துபாய் கோல்டன் விசாவும், அங்கு அதிகளவில் சொத்தும் வைத்துள்ளது பிரமாண பத்திரம் மூலம் தெரியவந்துள்ளது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.
இது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில் "இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தும் அனைத்தும் ஏஜென்சிகளும் மத்திய அரசின் கீழ் வருகிறது. அவர்கள் இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும். அவர்கள் ஏற்கனவே பவன் கெர்ராவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தட்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாகவே ஹிமாந்தா பிஸ்வா கார்கேவை 'பைத்தியக்காரன்' என்று கீழ்த்தரமாக பேசியுள்ளார்.
இந்நிலையில் அசாம் முதல்வர் பேச்சுக்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அசாம் முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே மீது பயன்படுத்திய அவதூறான மற்றும் இழிவான மொழி, முற்றிலும் கண்டிக்கத்தக்கது, வெட்கக்கேடானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
திரு. கார்கே, இந்நாட்டின் மூத்த, பிரபலமான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தலித் மக்கள் தலைவர் ஆவார்.
அவரது அனுபவம், ஆளுமை மற்றும் நற்பெயருக்கு ஈடுஇணை ஏதுமில்லை. அவருக்கு இழைக்கப்படும் அவமதிப்பு என்பது வெறும் ஒரு தனிநபருக்கு இழைக்கப்படும் அவமதிப்பு மட்டுமல்ல; அது இந்நாட்டின் பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்களுக்கு இழைக்கப்படும் அவமதிப்பாகும்.
எனினும், இது ஒன்றும் புதிதல்ல; இது பாஜக மற்றும் மற்றும் ஆர்எஸ்எஸ் இல் ஆகியவற்றின் நீண்டகாலமாகவே இருந்துவரும், திட்டமிட்ட மனப்பான்மையையே பிரதிபலிக்கிறது.
அது பாபாசாகேப் அம்பேத்கரை அவமதிப்பதாக இருக்கட்டும், தலித் தலைவர்களை இழிவுபடுத்துவதாக இருக்கட்டும், அல்லது பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின சமூகங்களின் பிரதிநிதிகள் மீது தனிப்பட்ட தாக்குதல்களைத் தொடுப்பதாக இருக்கட்டும், எப்போதெல்லாம் ஒரு தலித் தலைவர் உண்மையை உரக்கப் பேசுகிறாரோ, அப்போதெல்லாம் அவரை அவமானப்படுத்தும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுகிறார்கள் என்பதற்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-இன் வரலாறு சாட்சியாகத் திகழ்கிறது.
இதுவே அவர்களின் சித்தாந்தம்; இதுவே அவர்களின் உண்மையான குணாதிசயம் மற்றும் உண்மையான முகம்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு நேரடியான கேள்வி, ஹிமந்த சர்மா பயன்படுத்திய இந்த மொழியை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? உங்கள் மௌனம் என்பது கையறு நிலையின் அடையாளம் அல்ல; மாறாக, அது இந்தச் செயலில் உங்களுக்கும் உடன்பாடு உண்டு என்பதற்கான அடையாளமே ஆகும்.
இந்நாட்டின் கோடிக்கணக்கான தலித் மக்களின் கண்ணியத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதலைக் கண்ணாரக் கண்டபின்னும் பிரதமர் மௌனம் சாதிப்பாரேயானால், அவர் தனது பொறுப்புகளிலிருந்து விலகி ஓடுபவர் மட்டுமல்ல; உண்மையில், அந்த அவமதிப்புச் செயலில் அவரும் ஒரு பங்காளியாகவே ஆகிறார்." என்று தெரிவித்துள்ளார்.