கவுகாத்தி:
126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநில சட்டசபைக்கு ஒரே கட்டமாக வருகிற 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
இங்கு ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் கூட்டணிகளுக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அசாம் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
இந்த நிலையில் அசாம் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று பா.ஜ.க. வெளியிட்டது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இதை வெளியிட்டார். அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா, மத்திய மந்திரி சர்பானந்தா சோனோவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பான, வளர்ந்த அசாம் என்ற பெயரில் பா.ஜ.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 31 வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
அசாம் மாநிலத்தில் ஏற்கனவே 1.64 லட்சம் அரசு பணி நிறைவு செய்யப்பட்டது. மேலும் 2 லட்சம் கூடுதல் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்.
முதல்-மந்திரி ஆத்ம நிர்பர் அசாம் அபிஜான் திட்டத்தின் கீழ் புதிய தொழில் முயற்சிகளை உருவாக்க 10 லட்சம் இளைஞர்களுக்கு ரூ.5 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படும்.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராமம் மற்றும் நகரம்) திட்டத்தின் கீழ் ஏற்கனவே 22 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் 15 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் அடிப்படை வசதிகளுடன் தரமானதாக வழங்கப்படும்.
ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக ‘அசாம் கதி சக்தி மாஸ்டர் பிளான்’ திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்.
அரிசி, மைசூர் பருப்பு, சர்க்கரை, உப்பு போன்றவை சலுகை விலையில் வழங்கப்படும். மேலும் கடுகு எண்ணெய் ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். முதல்-மந்திரியின் மகிளா உதயமிதா அபியான் திட்டம் விரிவுப்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள பயனாளிகளுக்கு ரூ.25 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. இதை விரிவுப்படுத்தி 40 லட்சம் லட்சாதிபதி பெண்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.
மாதாந்திர நேரடி வங்கி உதவி தொகை படிப்படியாக ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும். இந்த திட்டம் மேலும் 15 லட்சம் குடும்பங்களுக்கு விரிவுப்படுத்தப்படும்.
ஏழை மக்களுக்கு எல்.கே.ஜி. முதல் முதுகலை படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும். சட்ட விரோத குடியேற்றத்துக்கு எதிரான ‘புஷ்பேக்’ கொள்கை தொடரும்.
சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்து நிலங்களும் முழுமையாக மீட்கப்பட்டு அசாமின் உண்மையான குடிமக்களுக்கு நிலம் வழங்கப்படும்.
லவ்ஜிகாத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அசாமில் 6-வது அட்டவணை, பழங்குடியின பகுதிகளை தவிர்த்து பிற இடங்களில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும்.
இவ்வாறு பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.