அசாம் - அருணாச்சல பிரதேச எல்லை 
இந்தியா

அசாம் - அருணாச்சல பிரதேச எல்லைப் பிரச்சனை.. துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் காயம் - நால்வர் கவலைக்கிடம்

சுதந்திரத்திற்குப் பின் வடகிழக்கு மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்ட போது இந்த எல்லைப் பிரச்சினை தொடங்கியது.

அசாமின் தேமாஜி மாவட்டம் அருணாச்சலப் பிரதேச எல்லையில் அமைந்துள்ளது.

தேமாஜி மாவட்டத்தில் கோகாமுக் வருவாய் வட்டத்திற்குட்பட்ட மின்மாங் படாட்டி என்ற பகுதியில், நில ஆக்கிரமிப்பு தொடர்பாக இரு மாநில எல்லைக் கிராம மக்களுக்கு இடையே நீண்டகாலமாக தகராறு இருந்து வந்தது.

துப்பாக்கிச்சூடு

இந்நிலையில் நேற்று அருணாச்சலப் பிரதேச பகுதியிலிருந்து வந்த மர்ம நபர்கள், அசாம் கிராம மக்களை நோக்கிக் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 18 பேரும் உடனடியாக கோகாமுக் கிராமப்புற மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அவர்கள் மேல் சிகிச்சைக்காக திப்ரூகரில் உள்ள அசாம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அசாம் முதல்வர் விளக்கம்

இச்சம்பவத்திற்கு பிறகு பேசிய அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, "அசாம் எல்லைப் பகுதியில் கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அசாமின் ஒரு அங்குல நிலத்தைக் கூட இழக்கக் கூடாது என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். இரு மாநிலத் தலைமைச் செயலாளர்களும், டிஜிபிக்களும் பேசிச் சூழலைத் தணித்து வருகின்றனர்" என்றார்.

அசாம் கல்வி அமைச்சர் ரனோஜ் பெகு அருணாச்சலப் பிரதேச அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பப்பட்டுள்ளார்.

எல்லைப் பிரச்சினை

அசாம் - அருணாச்சல பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் இடையே 804 கி.மீ நீளமுள்ள எல்லைப் பகுதி உள்ளது.

சுதந்திரத்திற்குப் பின் வடகிழக்கு மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்ட போது இந்த எல்லைப் பிரச்சினை தொடங்கியது.

அருணாச்சலப் பிரதேசம் 1987இல் தனி மாநில அந்தஸ்து பெற்ற பிறகு, முத்தரப்புக் குழு அளித்த பரிந்துரைகளை அசாம் ஏற்க மறுத்ததால், இந்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

ஜூலை 29 அன்று அசாம் சட்டப்பேரவையில் அளிக்கப்பட்ட தகவலின்படி, அசாமின் 7 மாவட்டங்களில் உள்ள 16,144 ஹெக்டேர் நிலம் அருணாச்சலப் பிரதேசத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அதேவேளையில் அருணாச்சலப் பிரதேசமும் 858 சதுர கி.மீ நிலத்திற்கு உரிமை கோரி வருகிறது.

இச்சிக்கலை தீர்க்க ஜூலை 15, 2022 அன்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவும், அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா கண்டும் 'நாம்சாய் பிரகடனத்தில்' கையெழுத்திட்டபோதிலும் சிக்கல் தீரவில்லை.