கூகுள் செயற்கை நுண்ணறிவு தரவு மைய அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:-
இந்தியாவின் ஏ.ஐ. சார்ந்த டிஜிட்டல் உள்கட்டமைப்பை வலுப்படுத்து வதில் இந்த மையம் ஒரு பெரிய நடவடிக்கை. இதன் மூலம் விசாகப் பட்டினம், மாபெரும் ஏ.ஐ. கூடமாக உருவெடுக்கும். ஏ.ஐ. நகரமாக மாறும்.
கல்வி, சுகாதாரம், விண்வெளி, சரக்கு போக்குவரத்து, விவசாயம் என ஒவ்வொரு துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு மாறுதலை ஏற்படுத்தி வருகிறது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதில் இருந்து இத்திட்டம் வேகம் எடுத்துள்ளது. விரைவில் பிரதமர் மோடி திறந்து வைப்பார். தகவல் தொழில்நுட்ப சேவைகளில் தலைவராக இந்தியா உருவெடுத்துள்ளது. மின்னணு மற்றும் செமிகண்டக்டர் உற்பத்தியில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அதிக அளவில் செல்போன்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. உள்நாட்டு மின்னணு தேவையில் 50 சதவீதம் பூர்த்தி செய்யப்படுகிறது.
தொழில்நுட்ப நிறுவனங்கள், சர்வர்கள், ஜி.பி.யு.கள், சிப்கள் ஆகியவற்றை இந்தியாவில் தயாரிக்க வேண்டும். இது கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.