குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் சாமியார் ஆசாராம் பாபு. இவருக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உள்பட பல இடங்களில் ஆசிரமம், அறக்கட்டளைகள் உள்ளன.
சாமியார் ஆசாராம் பாபு மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. 2013ம் ஆண்டு ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் 16 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 2018ம் ஆண்டு ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் ஜோத்பூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இதுவரை பலமுறை இவர் ஜாமீனில் வெளிவந்தது சர்ச்சையானது.
இந்நிலையில் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் இருந்து ஆசாராமை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் நேற்று விடுவித்தது. மேலும் அவர் மீது பதியப்பட்ட போக்சோ பிரிவு 5(G)/6, சம்பவத்திற்கான சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக ஐபிசி பிரிவு 120(B) வழக்குகளில் இருந்தும் அவரை விடுவித்தது.
இதே வழக்கில் ஆசாராமுடன் சக குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த அவரது ஆசிரமத்தைச் சேர்ந்த சஞ்சிதா குப்தா மற்றும் சரத் சந்திரா ஆகிய இருவரையும் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் நீதிமன்றம் முழுமையாக விடுவித்து உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும், அதே சிறுமியைத் தனிப்பட்ட முறையில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கீழ் நீதிமன்றம் ஆசாராமுக்கு விதித்த ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
உடல்நிலையை காரணம் காட்டி ஆசாரம் தற்பொழுது ஜாமீனில் வெளியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.