இந்தியா

வீர தீர விருது பெற்ற ராணுவ வீரர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இலவச ரெயில் பயணம்

குறிப்பிட்ட விருதுகளைப் பெற்றவர்களுக்கு ரெயில்களில் இலவச பயணச்சலுகை வாழ்நாள் முழுவதுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

புதுடெல்லி:

ராணுவத்தில் வீர தீர செயல்களுக்கான மிக உயரிய விருது அசோக சக்கர விருது ஆகும். இதற்கு அடுத்து கீர்த்தி சக்கர விருது மற்றும் சூரிய சக்கர விருதுகள் உள்ளன. இதுபோல போர்க்கால திறமைக்காக வீர சக்கர விருது. மகாவீர் சக்கர விருது மற்றும் பரம்வீர் சக்கர விருதுகளும் வழங்கப்படுகின்றன.

இந்த விருதுகளைப் பெற்றவர்களுக்கு ரெயில்களில் இலவச பயணச்சலுகை வாழ்நாள் முழுவதுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தற்போது சேனா பதக்கம், நவ்சேனா பதக்கம் மற்றும் வாயுசேனா பதக்கம் பெற்ற வீரர்களுக்கும் இது விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.

இந்த விருதுகளைப் பெற்ற வீரர்கள் ரெயில்களில் முதல் வகுப்பு, 2-ம் வகுப்பு ஏ.சி. மற்றும் 'சேர் கார்' ஆகியவற்றில் இலவசமாகப் பயணிக்கத் தகுதி பெறுகிறார்கள். இது வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு பொருந்தும். அவர்கள் மட்டும் அல்லாது துணையாக செல்கிற ஒருவருக்கும் இலவச பயணம் அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.