கேரளாவின் முன்னாள் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பொது சேவை ஆணையத்தின் (PSC) தலைவர் எம்.ஆர். பைஜு மற்றும் அதன் 15 உறுப்பினர்களை பதவியிலிருந்து நீக்குமாறு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் பரிந்துரைத்துள்ளார்
ஆட்சேர்ப்பு அமைப்பில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, கேரள அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் எம்.ஆர். பைஜுவைப் பதவி நீக்கம் செய்ய முன்னாள் கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பரிந்துரைத்ததாக, பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனம் வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
மாநில பொது சேவை ஆணையத்தின் தலைவரை நேரடியாகப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லாததால், அரசியல் சாசன விதி 317-ன் படி இந்த விவகாரத்தை குடியரசுத் தலைவரின் கவனத்திற்கு அவர் கொண்டு சென்றுள்ளார்.
அர்லேகர் தமிழ்நாட்டிற்கு இடமாற்றம் செய்யப்படுவதற்கு சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு, தனது பரிந்துரைக்கான காரணங்களை விவரித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு ஒரு கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது.
மாநில வரலாற்றிலேயே ஆளுநர் ஒருவர் பொது சேவை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரையும் நீக்கக் கோரி குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை கடிதம் அனுப்பியிருப்பது இதுவே முதல் முறையாகும்.
அர்லேகர் கேரள ஆளுநராகப் பணியாற்றியதோடு, அண்டை மாநிலமான தமிழ்நாட்டிற்கு மாற்றப்படுவதற்கு முன்பு அதன் கூடுதல் பொறுப்பையும் வகித்தார். இந்த நிலையில் அக்டோபர் 23 அன்று அவர் கேரள ஆளுநர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார், அவருக்குப் பிறகு ஓம் பிரகாஷ் மாத்தூர் புதியு முழுநேர ஆளுநராக பொறுப்பேற்றார்.
குடியரசுத் தலைவருக்கு எழுதிய தனது கடிதத்தில், முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளையும், சட்டப்பூர்வ அமைப்பின் செயல்பாடுகள் குறித்த விசாரணையையும் அர்லேகர் குறிப்பிட்டதாக லோக் பவன் வட்டாரங்கள் பிடிஐ-யிடம் தெரிவித்துள்ளன. மேலும், அவர் இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்திற்கும் பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (PSC), மாநில அரசுப் பணிகளுக்கான தகுதியுள்ள நபர்களை தேர்ந்தெடுக்கும்.அதன் உறுப்பினர்கள் ஆறு ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்படுகிறார்கள்.
பிஎஸ்சி வழக்கு தொடர்பான விசாரணை மெத்தனமாக இருந்ததாகக் கூறி, கேரள உயர் நீதிமன்றம் சமீபத்தில் மாநில அரசை விமர்சித்திருந்தது.
இந்த நிலையில் கேரள PSC தேர்வுகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்த புகார்கள், உள்ளக ஆய்வு மற்றும் காவல்துறை விசாரணையைத் தொடர்ந்து, பைஜுவை அப்பதவியிலிருந்து நீக்குமாறு அர்லேகர் பரிந்துரைத்துள்ளார்.