இந்தியா

ஐதராபாத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: அரசு அதிகாரி வீட்டில் கட்டு, கட்டாக பணம் பறிமுதல்

ஐதராபாத்தின் புறநகர் முக்கிய பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள், வீட்டுமனைகள் வாங்கியதற்கான ஆவணங்கள் சிக்கியது. அவற்றின் மதிப்பு ரூ.100 கோடிக்கு மேல் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத், சத்ரி கானாவை சேர்ந்தவர் நரஹரி ராவ். இவர் நிலம் மற்றும் நில அளவைத்துறை துணை இயக்குனராக பணியாற்றி வந்தார்.

இவர் லஞ்சப் பணத்தில் ஏராளமான சொத்துக்கள் சேர்த்து வைத்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு பல்வேறு புகார்கள் சென்றது.

இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சத்ரி கானாவில் உள்ள நரஹர ராவ் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு என 11 இடங்களில் நேற்று காலை ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அவரது படுக்கை அறையில் இருந்த பீரோவுக்கு அடியில் 5 சூட்கேஸ்கள் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். அதனைத் திறந்து பார்த்த போது கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. ரூபாய் நோட்டுக்களை எண்ணி பார்த்தபோது ரூ 1.54 கோடி இருந்தது.

மேலும் பீரோவில் ஒரு கிலோ தங்கம், வெள்ளிப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஐதராபாத்தின் புறநகர் முக்கிய பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள், வீட்டுமனைகள் வாங்கியதற்கான ஆவணங்கள் சிக்கியது. அவற்றின் மதிப்பு ரூ.100 கோடிக்கு மேல் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நரஹர ராவின் வங்கி லாக்கரை திறந்து பார்த்தபோது அதில் 2.29 கோடி ரொக்க பணம் மற்றும் ரூ 5.04 கோடி மதிப்பிலான நிலையான வைப்புத் தொகைக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும் அவரது மனைவி பெயரில் 2 லாக்கர்கள் உள்ளதை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அந்த லாக்கர்களை இன்று திறந்து பார்க்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மேலும் வங்கி கணக்குகளை முடக்க வங்கி அதிகாரிகளுக்கு லஞ்ச ஒழிப்பு துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.