அமெரிக்க அரசின் தேசிய பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடு உத்தரவு காரணமாக, தங்களின் அதிநவீன ஏஐ மாடல்களான 'ஃபேபிள் 5' மற்றும் 'மித்தோஸ் 5' ஆகியவற்றுக்கான பொது அணுகலை ஆந்த்ரோபிக் நிறுவனம் சமீபத்தில் நிறுத்தியது.
இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், தற்போது 'கிளாட் சானட் 5' என்ற புதிய செயற்கை நுண்ணறிவு மாடலை ஆந்த்ரோபிக் நிறுவனம் உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இலவசமாகப் பயன்படுத்தலாம்..
இந்த புதிய சானட் 5 மாடலை அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் இலவச மற்றும் ப்ரோ கணக்குகளுக்கான அடிப்படை மாடலாக ஆந்த்ரோபிக் மாற்றியுள்ளது. மேலும், இதன் வணிக ரீதியிலான சந்தாக்களான மேக்ஸ், டீம் மற்றும் எண்டர்பிரைஸ் பயனர்களுக்கும் இது தடையின்றி கிடைக்கிறது.
சுயமாகச் செயல்படும் திறன்..
முந்தைய சானட் 4.6 மாடலைக் காட்டிலும், இந்த புதிய பதிப்பு மனிதர்களின் தலையீடு இன்றி சுயமாகத் திட்டமிடுதல், பிரவுசர்கள் மற்றும் டெர்மினல்களைப் பயன்படுத்துதல் போன்ற பல அடுக்கு வேலைகளைத் துல்லியமாக செய்யும் திறன் கொண்டது.
பொதுவாக பெரிய மற்றும் விலை உயர்ந்த ஏஐ மாடல்களில் மட்டுமே இருக்கும் இந்த 'ஏஜென்டிக்' திறன்கள், தற்போது சாதாரண பயனர்களுக்கும் எளிதாகக் கிடைக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
விலை மற்றும் சலுகை..
வருகிற ஆகஸ்ட் 31 வரை ஒரு மில்லியன் இன்புட் டோக்கன்களுக்கு 2 டாலரும் (ரூ.189.40), அவுட்புட் டோக்கன்களுக்கு 10 (ரூ.947.00)டாலரும் அறிமுகச் சலுகை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு நிலையான கட்டணமாக 3 டாலர் (ரூ. 284.10) மற்றும் 15 (ரூ. 1420.51) டாலர் வசூலிக்கப்படும்.
அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு..
தவறான கோரிக்கைகளை நிராகரிப்பது, ஏஐ உலகை அச்சுறுத்தும் 'ப்ராம்ப்ட் இன்ஜெக்ஷன்' தாக்குதல்களைத் தடுப்பது மற்றும் தவறான தகவல்களை உருவாக்குவதைக் குறைப்பது போன்றவற்றில் சானட் 5 மிகவும் பாதுகாப்பானதாக உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தச் சேவை கிளாட் ஏபிஐ, அமேசான் பெட்ராக், கூகுள் கிளவுட் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஃபவுண்டரி ஆகிய தளங்களில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.