மும்பை :
மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் கடந்த மார்ச் மாதம் அப்போது உள்துறை மந்திரியாக இருந்த அனில்தேஷ்முக் மீது ஊழல் புகாரை கூறினார். அனில்தேஷ்முக் மும்பையில் உள்ள பார், ஓட்டல்களில் இருந்து மாதந்தோறும் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தருமாறு போலீசாரிடம் கூறியதாக தெரிவித்து இருந்தார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஏற்கனவே அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து அனில்தேஷ்முக் உள்ளிட்டவர்களை கைது செய்து உள்ளது. இதேபோல சி.பி.ஐ.யும் வழக்குப்பதிவு செய்து உள்ளது.
இதேபோல பரம்பீர் சிங், அனில்தேஷ்முக் மீது கூறிய குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க மாநில அரசு ஓய்வு பெற்ற நீதிபதி சண்டிவால் ஆணையத்தை அமைத்து உள்ளது. இதில் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை நேற்று நடந்தது. அப்போது அனில்தேஷ்முக் தரப்பு வக்கீல்கள் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என கூறினர். அனில் தேஷ்முக்கின் வக்கீல் வேறு வேலையில் மும்முரமாக இருப்பதால், விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என கூறியது.
இதனால் சண்டிவால் ஆணையம் அனில்தேஷ்முக்கிற்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து, அதை முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு செலுத்த உத்தரவிட்டது. மேலும் இதுதான் அனில்தேஷ்முக்கிற்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பு எனவும் கூறினர்.
பின்னர் விசாரணைக்கு புதன்கிழமை(இன்று) 12.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. ஏற்கனவே விசாரணை ஆணையம் விசாரணையை ஒத்திவைக்க கோரிய அனில் தேஷ்முக்கிற்கு ரூ.15 ஆயிரம் அபாரதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.