இந்தியா

சிறுமியை காப்பாற்றும் முயற்சியில் துங்கபத்ரா ஆற்றில் மூழ்கி 5 பேர் பலி

சிறுமி எப்படியோ நீந்தி கரையேறினார்.

ஆந்திர பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் மந்த்ராலயம் பகுதியில் துங்கபத்ரா ஆறு பாய்கிறது.

விடுமுறை நாட்களில் இங்கு பலர் வந்து குளித்துச் செல்வார்கள். மந்த்ராலயதிற்கு குடும்ப நிகழ்ச்சிக்காக வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களில் 10 பேர் நேற்று மாலை ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

அவர்களில் சிலர் மட்டும் ஆற்றில் இறங்காமல் கரையிலேயே இருந்து கொண்டனர். ஆற்றுக்குள் சென்றவர்கள் ஆழம் தெரியாமல் உள்ளே செல்ல அபர்ணா என்ற சிறுமி நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

அவரை காப்பாற்ற அடுத்தடுத்து 5 பேர் ஆற்றில் இறங்கியுள்ளனர். சிறுமி எப்படியோ நீந்தி கரையேறிய நிலையில் அவரை காப்பாற்ற சென்ற 5 பேரும் நீரில் அடித்து செல்லப்பட்டனர்.

கரையில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். தகவலறிந்து போலீசாரும் அங்கு வந்தனர்.

இரவு முழுவதும் தேடுதல் பணிகள் நடந்து வந்தன. ஐவரும் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களின் உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.