ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்குச் சிறப்புப் பிரிவு அந்தஸ்து வழங்குவதில் நீடித்து வரும் சிக்கல்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி காரணமல்ல, கடந்த 2014-ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு மேற்கொண்ட அவசரமான மற்றும் பிளவுபடுத்தும் அணுகுமுறையே காரணம் என்று ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காகப் புதுடெல்லி சென்றார்.
அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த 2014-ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு, ஆந்திரப் பிரதேசத்தை முறையற்ற வழியில் பிரித்துத் தெலுங்கானாவை உருவாக்கியது.
இதனால், அதிக வருவாய் ஈட்டித் தந்த ஹைதராபாத் தலைநகரைக் இழந்த ஆந்திரா, கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியது.
அப்போது காங்கிரஸ் கொடுத்த 'சிறப்பு அந்தஸ்து' வாக்குறுதி இன்றுவரை நிறைவேற்றப்படாமல் போனதற்கு அவர்களின் தவறான திட்டமிடலே காரணம்.
எனவே, இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மீது பழி போடுவது தவறு என்று குறிப்பிட்டார்.
ஆரம்பக் காலங்களில் சிறப்பு அந்தஸ்து கோரிக்கைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வந்த பவன் கல்யாண், தற்போது தனது அரசியல் வியூகத்தை மாற்றியுள்ளார்.
சிறப்பு அந்தஸ்துக்காகத் தொடர்ந்து போராடுவது இனி "வீணான சண்டை"என்று தெரிவித்துள்ளார்.
மாநில அமைச்சரவையும், சட்டமன்றமும் ஒருமுறை ஒரு முடிவை ஏற்றுக்கொண்டு முன்னோக்கிச் செல்லும்போது, மீண்டும் அதைப் பிடித்துக் கொண்டிருப்பது பலன் தராது என்றார்.
2018-ல் சிறப்பு அந்தஸ்து தராததால் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தற்போது மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளார்.
ஆந்திராவின் தற்போதைய பொருளாதாரச் சூழல் வெறும் 'சிறப்பு அந்தஸ்து' என்ற பெயரைக் கடந்துவிட்டதால், மத்திய அரசிடமிருந்து ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்புக்கான பெரிய நிதித் தொகுப்புகளை பெறுவதே தங்களது இலக்கு என்று சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் தலைமையிலான தற்போதைய ஆந்திர அரசு தெளிவுபடுத்தியுள்ளது.