சாலைப் பணிக்காக லாரியில் கொண்டு செல்லப்பட்டபோது ஜெலட்டின் குச்சிகள் வெடித்து டிரைவர், தொழிலாளர்கள் மற்றும் பைக்கில் சென்ற ஆசிரியை சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
ஆந்திரப் பிரதேச மாநிலம், அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம் அனந்தகிரி அடுத்த பினக்கோட்டா பகுதியில் சாலை அமைப்பதற்காகப் பாறைகளை வெடிவைத்துத் தகர்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்காக நேற்று மாலை லாரியில் ஜெலட்டின் குச்சிகள் கொண்டுவரப்பட்ட நிலையில், லாரியில் டீசல் தீர்ந்துபோனதால் அதனை நிரப்பும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென்று விபத்து நேரிட்டது. எதிர்பாராதவிதமாகப் பற்றிய தீ மளமளவெனப் பரவி லாரியின் கேபின் பகுதிக்குச் சென்றதால், அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின.
இந்த கோர விபத்தில் லாரியின் அருகே நின்றுகொண்டிருந்த டிரைவர் தேவாரப்பள்ளி மணி, தொழிலாளர்களான சீடகடாவைச் சேர்ந்த நாராயண ராவ், கடப்பாவைச் சேர்ந்த பவன் குமார் மற்றும் அடையாளம் தெரியாத 3 பேர் உட்பட மொத்தம் 6 பேரும், அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஆசிரியை அனிதா என்பவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஜெலட்டின் குச்சிகள் அதிவேகத்தில் வெடித்ததால் அருகே நிறுத்தப்பட்டிருந்த மேலும் 2 லாரிகள் தீப்பற்றி எரிந்ததோடு, இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு ஆங்காங்கே சிதறிக்கிடந்த விதம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.