இந்தியா

அறுவை சிகிச்சை மேற்கொண்ட பவன் கல்யாண் - நேரில் நலம் விசாரித்த முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

அவர் தற்போது நலமாகவும், நல்ல முன்னேற்றத்துடனும் உள்ளார்.

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வரும் துணை முதலமைச்சர் பவன் கல்யாணை சந்தித்து நலம் விசாரித்தார்.

எக்ஸ் தள பதிவு:

வலது தோள்பட்டையில் உள்ள (rotator cuff) தசைப் பகுதியில் ஏற்பட்ட பாதிப்புக்காக கல்யாண் அந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

முன்னதாக 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்ட முதல்வர் சந்திரபாபு நாயுடு, "கனம் பொருந்திய துணை முதலமைச்சர் திரு. பவன் கல்யாண் அவர்கள் முழுமையாகவும் விரைவாகவும் குணமடைய வாழ்த்துகிறேன்.

அவரது நல்வாழ்வுக்காக நான் பிரார்த்திக்கிறேன், மேலும் இக்காலத்தில் அவருக்கு மனவலிமை கிடைக்க வேண்டுகிறேன்," என்று குறிப்பிட்டிருந்தார்.

மருத்துவ அறிக்கை:

மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், கல்யாணின் வலது தோள்பட்டையில் 'ரோட்டேட்டர் கஃப்' காயம் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், இதில் சுப்ராஸ்பினேட்டஸ் (supraspinatus) மற்றும் இன்ஃப்ராஸ்பினேட்டஸ் (infraspinatus) தசைநார்களில் (tendons) பெரிய அளவிலான கிழிசல் மற்றும் அதனுடன் தொடர்புடைய 'கிரேட்டர் டியூபரோசிட்டி' (greater tuberosity) எலும்பு முறிவு ஆகியவை இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் ஜூலை 11, 2026 அன்று அவருக்கு வெற்றிகரமான ஆர்த்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆர்த்ரோஸ்கோபி மற்றும் தோள்பட்டை சிகிச்சை பிரிவின் இயக்குனர் டாக்டர். தின்ஷா பார்திவாலா இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.

அறுவை சிகிச்சை எவ்வித சிக்கலுமின்றி நிறைவடைந்தது; அவர் தற்போது நலமாகவும், நல்ல முன்னேற்றத்துடனும் உள்ளார். ஓய்வு மற்றும் குணமடையும் காலத்திற்கு பிறகு, அவர் முறையான தோள்பட்டை மறுவாழ்வுப் பயிற்சியை (rehabilitation programme) மேற்கொள்வார். அடுத்த நான்கு மாதங்களில் அவரது தோள்பட்டை செயல்பாடு முழுமையாக சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்றும் மருத்துவமனை தெரிவித்தது.

முதல்வர் பேட்டி:

செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, "கல்யாண் எப்போதும் மக்களுடன் இருப்பவர், மக்களை ஈர்க்கும் பெரும் ஆற்றல் கொண்டவர். மக்களிடையே இருக்கும்போது அவர் பெரும்பாலும் தன்னை மறந்துவிடுவார், அந்த சூழலால் அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.

இது சமீபத்திய பிரச்சனை அல்ல என்றும், அவர் பல நாட்களாகவே இதனால் அவதிப்பட்டு வந்ததாகர். பவன் கல்யாண் நன்றாக குணமடைந்து வருகிறார். மருத்துவர்கள் அவருக்கு மூன்று வாரங்கள் ஓய்வு எடுக்கவும், அதன்பிறகு பிசியோதெரபி சிகிச்சை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர்.

மற்றொரு கைக்கும் பிசியோதெரபி மற்றும் பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது; அதன்பிறகு அவரது முன்னேற்றம் குறித்து மருத்துவர்கள் மதிப்பீடு செய்வார்கள்," என்று கூறினார்.