ஊழலை ஒழிக்க அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை ஒழிக்க வேண்டும் என ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
2016ம் ஆண்டு நவம்பர் 8-ல் கருப்புப் பணம், கள்ள நோட்டுகள் மற்றும் ஊழலை ஒழிக்கும் வகையில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மத்திய அரசு திரும்ப பெற்றுக் கொண்டது. இது நடந்து 10 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு 500 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற வேண்டும் என்றார்.
அதிக மதிப்புள்ள பண பரிவர்த்தனைகளை நிறுத்தினால், ஊழல் சுழற்சியை உடைக்க முடியும் என்றும், செல்வம் உருவாக்குவதும் வறுமையை ஒழிப்பதும் எளிதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
டிஜிட்டல் நாணயம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிர்வாகத்துக்கு சந்திரபாபு நாயுடு வலுவாக ஆதரவு தெரிவித்தார். இது குறித்த அறிக்கைக்கு தானே கருத்துகளை வழங்கியதாகவும், இந்த விஷயத்தை பிரதமர் நரேந்திர மோடியிடம் பலமுறை எழுப்பியதாகவும் அவர் கூறினார்.
இதுகுறித்து கூறிய அவர்,“டிஜிட்டல் கரன்சி அறிக்கைக்கு கருத்துகளை கொடுத்தது நான்தான். இதை முன்பே பிரதமரிடம் வலியுறுத்தினேன், இப்போதும் மீண்டும் கேட்கிறேன். இதை தொடர்ந்து எழுப்புவேன்.
500, 1000, 2000 ரூபாய் நோட்டுகளை ஒழிக்க வேண்டும். 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் மட்டுமே இருக்க வேண்டும்,” என கூறினார்.
2016 நவம்பர் 8-ஆம் தேதி மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் 10-ஆம் ஆண்டு நிறைவு நாளுக்கு மறுநாள் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
கருப்பு பணம், கள்ள நோட்டுகள் மற்றும் ஊழலை தடுக்கவே அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.தொழில்நுட்பம் இருந்தால் வறுமை ஒழிப்பு சாத்தியம்“தொழில்நுட்பத்தை சரியாக செயல்படுத்தினால், செல்வத்தை உருவாக்குவது கடினமல்ல, வறுமையை ஒழிப்பதும் கடினமல்ல,” என்றும் அவர் கூறினார்.
பல்வேறு நிலைகளில் உள்ள அமைப்புகளில் உள்ள குறைபாடுகள் காரணமாகவே ஊழல் ஒரு தீய சுழற்சியாக மாறியுள்ளதாகவும், அதை தடுக்க தான் முயற்சித்ததாகவும் அவர் தெரிவித்தார்.