மேற்கு வங்கத்தை சேர்ந்த 80 வயது அசோக் தாதா பற்றிய கதை இது.
படிப்பறிவும் பகுத்தறிவும் மிக்கதாக சொல்லிக்கொள்பவர்களே தாங்கள் செல்லும் சாலையிலும் பொது இடங்களிலும் குப்பைகளை வீச கூசுவதில்லை.
அப்படியிருக்க, மேற்கு வங்கத்தை சேர்ந்த 80 வயது அசோக் தாதா செய்து வரும் வேலைக்கு முனைவர் பட்டமே கொடுக்கலாம். (வங்காளத்தில் தாதா என்றால் பெரிய அண்ணன் என பொருள்).
தினமும் காலை எழுந்தவுடன் காபி குடித்து செல்போனில் சஞ்சரிப்பது பலருக்கு பழக்கமான ஒன்றாகிவிட்டது. அப்படி அசோக் தாதாவுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது.
கடந்த 70 ஆண்டுகளாக நாள் தவறாமல் தினமும் காலையில் எழுந்து பன்குராவில் உள்ள தனது கிராமத்தின் சாலைகளை விளக்குமாறால் பெருக்குகிறார் தாதா. இது அவரின் கடமை கிடையாது. மாறாக கடந்த 70 ஆண்டுகளாக அது அவருக்கு ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது.
10 வயதில் அவரின் இந்த தன்னார்வ சேவை தொடங்கியது. தன்னார்வ பணி என்பதை பலரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் சேர்ந்தால் மட்டுமே செய்யக்கூடிய பணி என நினைத்துக்கொள்கின்றனர். ஒரு தனி மனிதன் சமூக அக்கறையுடன் தன்னிச்சையாக முன்வந்து செய்யும் சிறு விஷயமும் தன்னார்வ பணியே.
அப்படியொரு தனிமனிதன் தன்னெழுச்சியாக 10 வயதில் எப்படி உருவாகியிருக்க முடியும் என கேள்வி வரலாம். அசோக் தாதா பள்ளியில் பிரைட் ஸ்டூடன்ட் ஆக இருந்துள்ளார். ஆனால் குடும்பத்தின் ஏழ்மை நிலை 4 ஆம் வகுப்போடு அவரை பள்ளியில் இருந்து துரத்தி அடித்தது. ஆனால் 4 ஆம் வகுப்பு டிராப் அவுட்க்கு, படித்த "மேதைகள்"களுக்குக்கு கூட வராத அக்கறை - சமூக அக்கறை 10 வயதில் வந்துள்ளது.
கையில் விளக்குமாற்றை எடுத்து தெருவை சுத்தம் செய்யத் தொடங்கினார். யாரிடமும் பணத்தை எதிர்பார்த்தோ, உணவை எதிர்பார்த்தோ அவர் இதை செய்யவில்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆண்டுகள் கடந்து அவர் இந்த பணியை செய்து வருகிறார்.
தினமும் காலை எழுந்து 2 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம சாலைகளை பெருக்குகிறார் அசோக் தாதா. எந்தவித நிலையான சம்பளமோ, மாத முடிவில் அப்ரைஸல் - சம்பள உயர்வோ அவருக்கு இல்லை!
அவர் செய்வதை அவரை சுற்றி இருப்பவர்களாலேயே புரிந்து கொள்ளமுடியவில்லை. அவர் வினோதமான ஆள் என்றே ஊர் மக்கள் கருதினர். அவரின் வாழ்க்கையின் பெரும்பகுதியை இவ்வாறு சம்பளமற்ற தூய்மைப்பணியிலேயே கழித்துள்ளார். நாளின் மற்ற நேரங்களில் வயிற்றுப் பிழைப்புக்காக வெவ்வேறு வேலைகளை செய்து வந்துள்ளார்.
அவருக்கு திருமணமான பின்னர் அவரது மனைவி, இந்த சுத்தம் செய்யும் வேலையை நிறுத்தும்படி எவ்வளோ கேட்டுள்ளார். ஆனால் அசோக் தாதா கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் அவரை மனைவி புரிந்துகொண்டு பின்னர் அவருக்கு பிடித்ததை செய்வதை தடுக்கவில்லை. இந்த தம்பதி தினக்கூலி பணிகள் மூலம் மாதம் ரூ.3000 த்தில் குடும்பம் நடத்தி வருகிறது.
உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் தாதா காலையில் எழுந்து தெருக்களை பெருக்கும் பணியை நிறுத்துவதில்லை. தினமும் இவ்வாறு தொடர்ந்து வெயிலின் கீழ் சாலைகளை பெருக்குவது அவரின் உடல்நலனிலும் பாதிப்புகளை ஏற்படுத்தாமல் இல்லை. சில வருடங்கள் முன் அவருக்கு தீவிர உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளார்.
நாம் ஒரு காய்ச்சலில் விழுந்தாலே வேலைகளுக்கு முழுக்கு போட்டு விடுகிறோம். ஆனால் தாதா மரணத்தின் அருகே சென்று குணமாகி திரும்ப வந்து இந்த தள்ளாத வயதிலும் தனது சேவையை தொடர்கிறார்.
அது சுவாசிப்பதை போல, பார்ப்பதை போல, தூங்கி எழுவதை போல அவரின் வாழ்க்கையோடு ஒரு அங்கமாக மாறிவிட்டது. அவரை பொறுத்தவரை தெருக்களை கூட்டுவது வெறுமனே தூசியை அகற்றுவது மட்டும்மல்ல. மக்கள் நடந்துபோக ஒரு தூய்மையான பாதையை உருவாக்க வேண்டும் என்பதே அவரின் விளைவு.
அசோக் தாதாவின் பணி ஒன்றை நமக்கு முகத்தில் அறைந்தாற்போல உணர்த்துகிறது. சமூக சேவை என்பது படாடோபமான அமைப்புகளில் இணைந்துதான் செய்ய வேண்டும் என்பது இல்லை. கையில் ஒரு விளக்ககுமாற்றை எடுத்து நாம் இருக்கும் பகுதியை தூய்மைப்படுத்துவதும் சமூக சேவையே. அதுகூட வேண்டாம், குறைந்தபட்சம் நமது குப்பைகளை கீழே போடாமல் அதற்கான குப்பைத்தொட்டியில் போடுவதே நாம் இந்த சமூகத்திற்கு செய்யும் மிகப்பெரிய சமூக சேவைதான்!.