பருந்து இனங்களில் 'அமூர் ஃபால்கன்' என அழைக்கப்படும் அமூர் பருந்துகள் சிறப்பு வாய்ந்தவை. ஓராண்டில் நீண்ட தூரம் பறக்கும் வகையான இவை ஆப்பிரிக்காவில் அதிகம் வசிக்கின்றன. கண்டம் விட்டு கண்டம் பறந்து இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த வகை பறவைகள் ஓராண்டில் சுமார் 20 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பறப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மணிப்பூர் அமூர் ஃபால்கன் கண்காணிப்பு திட்டத்தின் கீழ், (Manipur Amur Falcon Tracking Project) இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் விஞ்ஞானிகள், நவம்பர் 2025-ல் 2 ஃபால்கன் பறவைகளின் மீது எடை குறைந்த செயற்கைக்கோள் டிரான்ஸ்மிட்டர்களை பொருத்தினர்.
இந்த கருவிகள், பறவைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், அவை இடம்பெயரும் பாதைகளை கண்டறியவும், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும்போது அவை எவ்வளவு நேரம் பறக்கின்றன என்பதை பதிவு செய்யவும் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகின்றன.
'அலாங்' என்று பெயரிடப்பட்ட ஒரு இளம் அமூர் ஃபால்கன் பறவை, மணிப்பூரிலிருந்து சோமாலியா வரை 5,700 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 101 மணிநேரத்தில் அதாவது சுமார் 4 நாட்கள் 5 மணிநேரத்தில் இடைநிறுத்தமின்றி கடந்து சாதனை படைத்துள்ளது. உலகின் மிக நீண்ட தூரம் இடம்பெயரும் பறவைகளில் ஒன்றான இது, தனது வியக்கத்தக்க சகிப்புத்தன்மையை இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.
பறவைகளை கண்காணிக்கும் அதிகாரிகள் பகிர்ந்துள்ள சமீபத்திய செயற்கைக்கோள் கண்காணிப்புத் தரவுகளின்படி, 'அலாங்' ஓய்வெடுக்கவோ அல்லது உணவு உண்ணவோ நிற்காமல் ஆப்பிரிக்க கடற்கரையை சென்றடைந்தது.
இந்த 2 பறவைகளும் மணிப்பூரின் தமெங்லாங் மாவட்டத்தில் உள்ள ஒரு தங்குமிடத்திலிருந்து தங்கள் பயணத்தைத் தொடங்கின. அங்கு அவை சுமார் 25 நாட்கள் தங்கி, உணவருந்தி ஓய்வெடுத்த பிறகு, சவாலான கடல் பயணத்தை மேற்கொண்டன.
ஒவ்வொரு ஆண்டும், இவை கிழக்கு ரஷ்யா, வடகிழக்கு சீனா மற்றும் மங்கோலியாவில் உள்ள இனப்பெருக்க இடங்களிலிருந்து, ஆப்பிரிக்காவின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள குளிர்கால வாழ்விடங்களுக்குப் பயணம் செய்கின்றன.
அவற்றின் இடம்பெயர்வு வடகிழக்கு இந்தியா வழியாகச் செல்கிறது. அங்கு, மணிப்பூர் மற்றும் நாகாலாந்தில் பெரும் பறவைக் கூட்டங்கள் கூடி, பூச்சிகளை உண்டு, வரவிருக்கும் நீண்ட பயணத்திற்கான ஆற்றல் இருப்பை சேமித்துக்கொள்கின்றன.
மிகவும் சவாலான பயணப் பகுதிகளில் ஒன்று அரபிக்கடலைக் கடப்பதாகும். அங்கு, பறவைகள் ஓய்வெடுக்கவோ அல்லது உணவளிக்கவோ தரைப்பகுதிக்கு வழியின்றி ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பறக்கின்றன. ஆலங்கின் பயணம், அந்தப் பயணத்திற்கும் சகிப்புத்தன்மைக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்.
அபபாங், ஏற்கனவே ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களைக் கடந்து, இன்னும் அந்தப் பயணத்தை மேற்கொண்டு வருகிறது.
இவற்றின் பயணம் குறித்த தகவல்களை, தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு பகிர்ந்துள்ளார். அதில்,
அலாங்கின் இந்தப் பயணம், வடகிழக்கு இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு முயற்சிகளின் முக்கியத்துவத்தை நமக்கு நினைவூட்டுகிறது.
தமெங்லாங் பகுதியில் உள்ள சமூகங்கள், இந்தப்பறவைகளின் பாரம்பரிய ஓய்விடங்களைப் பாதுகாப்பதில் மிக முக்கியப் பங்காற்றியுள்ளன. ஆயிரக்கணக்கான வலசை வரும் வல்லூறுகள், தங்கள் பயணத்தைத் தொடரும் முன் பாதுகாப்பாக ஒன்றுகூடுவதற்கு இது வழிவகுத்துள்ளது.
100 மணி நேரத்திற்கும் மேலாக வானில் பறந்த பிறகு, 'அலாங்'இப்போது ஆப்பிரிக்காவை சென்றடைந்துள்ளது.
அபபாங் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது, இச்சிறிய பறவைகள் எவ்வளவு நீண்ட தூரத்தை கடக்க வல்லவை என்பதை புரிந்துகொள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.