கேரளம் மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமீபிக் எனும் மூளைக் காய்ச்சல் பாதிப்பு பலருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக உயிரிழப்புகளும் நிகழ்ந்தன. மாசுபட்ட நீர் நிலைகளில் குளிப்பதால் அமீபிக் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக சில காலங்கள் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மீண்டும் சோக சம்பவமாக அமீபிக் பாதிப்பில் ஒரு பெண் இறந்துள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு:-
ஆலுப்புழா மாவட்டம் அம்பலப்புழா அருகே உள்ள நீர்குன்னம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஆர்யா (வயது 26). பெங்களூரூவில் செவிலியராக பணியாற்றிய இவர், வெளிநாடு செல்லும் எண்ணத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பினார். இந்த நிலையில் சுமார் 1 மாதத்திற்கு முன்பு அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது.
இதற்காக சிகிச்சை எடுத்த ஆர்யா, பின்னர் வீடு திரும்பினார். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் அமீபிக் எனும் மூளைக்காய்ச்சல் பாதிப்பு அவருக்கு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி 18 நாட்களுக்கு பிறகு ஆர்யா பரிதாபமாக இறந்தார்.