இந்தியா

குண்டு துளைக்காத கண்ணாடியால் கூட காப்பாற்ற முடியாது: அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொலை மிரட்டல்

பஞ்சாபில் 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆபரேஷன் ப்ளூஸ்டார் நடவடிக்கையில் சீக்கிய மதகுரு உயிரிழந்தார்.

பஞ்சாபில் 1984 ஆம் ஆண்டு சீக்கியர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கூறி, பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆபரேஷன் ப்ளூஸ்டார் நடவடிக்கையில் சீக்கிய மதகுரு ஜர்னைல் சிங் பிந்தரவ்வாலே உயிரிழந்தார்.

இந்த சம்பவத்திற்கு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தான் காரணம் என சீக்கிய அமைப்பினர் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து இதற்கு பழிவாங்கும் விதமாக, இந்திரா காந்தியை அவரது சீக்கிய மெய்க்காப்பாளர்கள் சுட்டு படுகொலை செய்தனர்.

இதைத்தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக ராணுவம் நடத்திய அடுக்குமுறையில் பல சீக்கியர்கள் உயிரிழந்தனர். இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 2,733 சீக்கியர்கள் கொல்லப்பட்டதாக அஹூஜா குழு தெரிவித்தது.

அமிதாப் பச்சன் மீது குற்றச்சாட்டு

இதையடுத்து இந்த காலகட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெளியே நின்று, ரத்தத்திற்கு ரத்தம் என அமிதாப் பச்சன் கோஷமிட்டதாக சீக்கிய அமைப்பினர் குற்றம்சாட்டினர்.

இந்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்த அமிதாப் பச்சன், தனது தாய்வழியான தாத்தா பாட்டி ஆகியோர்கள் சீக்கியர்கள் தான் என கூறினார்.

மேலும் இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் அவை தீய நோக்கம் கொண்டவை எனவும் அமிதாப் பச்சன் கூறினார்.

சீக்கிய கலவரம்

இந்த சூழ்நிலையில் 1984 ஆம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களை குறிப்பிட்டு, அந்த வன்முறைக்கு காரணமானவர்கள் ஒருபோதும் மன்னிக்கப்பட மாட்டார்கள் என ரவுடி கோல்டி தில்லன் சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

மேலும் பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர்களுக்கு மரண அச்சுறுத்தல்களும் விடப்பட்டன.

இதையடுத்து மும்பையில் உள்ள அமிதாப் பச்சனின் இல்லத்திற்கு மின்னஞ்சல் மூலமாக வெடி முண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இருவர் கைது

இதைத்தொடர்ந்து பஞ்சாப் ஜலந்தரை சேர்ந்த விகாஸ் தாக்கூர் மற்றும் தர்ன் தாரன் பகுதியை சேர்ந்த தீபக் சிங் ஆகிய இருவரை டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவு சனிக்கிழமை கைது செய்தனர்.

இந்த சம்வத்தையடுத்து நவம்பர் 1 அன்று, மும்பை ஜல்சா பகுதியில் உள்ள தனது வீட்டின் முன்பு அமிதாப் பச்சன் தனது ரசிகர்களை சந்தித்தார்.

அப்போது வழக்கத்திற்கு மாறாக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு, மூன்று பக்கமும் குண்டு துளைக்காத கண்ணாடிக்கு பின்னால் அமிதாப் பச்சன் தோன்றினார்.

ரவுடி கோல்டி தில்லன் மிரட்டல்

இந்த நிலையில் தங்களது கூட்டாளிகள் இருவர் கைது செய்யப்பட்டாலும், அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர்களுக்கு எதிரான மரண அச்சுறுத்தலில் எந்த மாற்றமும் இல்லை என ரவுடி கோல்டி தில்லன் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப்பதிவில், மும்பையில் தனது கூட்டாளிகள் சுமார் 200 பேர், இந்த தாக்குதலில் தீவிரமாக ஈடுபட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோரின் பெயரை குறிப்பிட்டு, குண்டு துளைக்காத கண்ணாடி கூட அவர்களை பாதுகாக்காது என்றும் எச்சரித்துள்ளார்.

SCROLL FOR NEXT