இந்தியா

அமித் ஷா ஊடுருவல்காரர்களை பற்றி மட்டுமே பேசுகிறார்: அவர்களை நாடு கடத்தவில்லை- கார்கே

ஊடுருவல்காரர்களை பற்றி பேசும் அமித் ஷா, அவர்களை வெளியேற்றவில்லை என்று கார்கே குற்றம்சாட்டினார்.

அசாம் மாநிலத்தில் வருகிற 9-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் கார்கே கச்சார் மாவட்டத்தில் உள்ள போர்கோலா என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அமித் ஷா இங்கே (அசாம்) வரும்போது, வங்கதேச ஊடுருவல்காரர்களை பற்றி மட்டுமே பேசுகிறார். ஆனால், அவர்களை நாடு கடத்தவில்லை. அவர்களை வளர்க்கிறார்கள். அவர்கள் பெயர்களை வைத்து அரசியல் செய்கிறார்கள். மத்தியிலும், அசாம் மாநிலத்தில் 10 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் இருந்துள்ளது. ஆனால் அவர்களை வெளியேற்ற முடியவில்லை.

2005 முதல் 2013 வரை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அலரசு 88,792 சட்டவிரோதமாக குடியேறிவர்கள வெளியேற்றியது. ஆனால், மோடி அரசு 2014 முதல் 2019 வரை 2566 பேரை மட்டுமே வெளியேற்றியுள்ளது. பாஜக, மோடி, அமித் ஷா வெறும் தேர்தல் வாக்குறுதிகள் மட்டுமே கொடுப்பார்கள். உண்மையில் அவர்கள் எதுவும் செய்வதில்லை.

இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.