இந்தியா

அமெரிக்க நெருக்கடியா? UPI கட்டண விவகாரத்தில் மத்திய அரசு அதிரடி விளக்கம்!

மத்திய அரசு அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பணிந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

தனிநபர்களுக்கு இடையேயான பணப்பரிவர்த்தனைகளுக்கும், கடைகளில் QR கோட் மூலம் செய்யப்படும் சாதாரண பரிவர்த்தனைகளுக்கும் எந்தவிதக் கட்டணமும் விதிக்கப்படாது.

UPI பரிவர்த்தனைகளுக்கு Merchant Discount Rate (MDR) கட்டணம் அமல்படுத்துவது அமெரிக்க நிறுவனங்களுக்கு பயனளிப்பதற்காகவே என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தியாவின் கொள்கை முடிவுகள் முற்றிலும் சுயாதீனமாகவே எடுக்கப்படுகின்றன என்று மத்திய நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

மத்திய அரசு அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பணிந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. UPI மற்றும் RuPay தளங்களின் வளர்ச்சியால் Visa மற்றும் Mastercard போன்ற அமெரிக்க நிறுவனங்கள் சந்தையில் பெரும் பின்னடைவை சந்தித்ததாகவும், அவற்றை ஊக்குவிக்கவே இந்த கட்டணம் கொண்டுவரப்படுவதாகவும் காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் சாடினார்.

மத்திய நிதி அமைச்சகத்தின் விளக்கம்

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சகம், "UPI தொடர்பான முடிவுகள் அனைத்தும் நாட்டின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அமைப்பை மேலும் வலுப்படுத்தவும், நீடித்த வளர்ச்சிக்கு வழிவகுக்கவும் மட்டுமே எடுக்கப்படுகின்றன. இதில் எவ்வித வெளிநாட்டு தலையீடும் இல்லை" எனத் தெரிவித்தது.

புதிய UPI கட்டண விதிமுறைகள்

*தனிநபர்களுக்கு இடையேயான (Person-to-Person) பணப்பரிவர்த்தனைகளுக்கும், கடைகளில் QR கோட் மூலம் செய்யப்படும் சாதாரண பரிவர்த்தனைகளுக்கும் எந்தவிதக் கட்டணமும் விதிக்கப்படாது. இவை எப்போதும் போல் முற்றிலும் இலவசமாகவே தொடரும்.

*அக்டோபர் 15 முதல், ரூ.2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% MDR கட்டணம் விதிக்கப்படும். ஒரு மாதத்திற்கு ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக UPI மூலம் பணம் பெறும் வணிகர்கள் மட்டுமே இந்த வரம்பிற்குள் வருவார்கள்.

*இந்த கட்டணம் பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 95 சதவீதத்திற்கும் அதிகமான வணிகப் பரிவர்த்தனைகள் ரூ.2,000-க்கு குறைவாகவே இருப்பதால், சாதாரணக் கடைக்காரர்களோ அல்லது நுகர்வோரோ இதன் மூலம் பாதிக்கப்பட மாட்டார்கள்.

*இந்த MDR கட்டணத்தை வாடிக்கையாளர்கள் மீது வணிகர்கள் சுமத்தக்கூடாது என வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கட்டணம் வசூலிப்பதன் நோக்கம்

இந்தக் கட்டணம் அரசுக்கோ அல்லது UPI அமைப்பை இயக்கும் NPCI நிறுவனத்திற்கோ செல்லும் வரி அல்ல என்றும் நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. UPI கட்டமைப்பு, தொழில்நுட்ப பராமரிப்பு மற்றும் வங்கிகளின் செயல்பாட்டுச் செலவுகளை ஈடுகட்டவே இந்த நிதி பயன்பாட்டுப் பங்கேற்பாளர்களுக்கு இடையே பகிர்ந்தளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT