தேசிய நெடுஞ்சாலைகளில் பணியில் ஈடுபடுத்தப்படும் ஆம்புலன்ஸ்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு 10 நிமிடங்களுக்குள் சென்றடைய தவறினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தெரிவித்துள்ளது.
அதேபோல், பாதிக்கப்பட்டவரை முக்கியமான ‘ஒரு மணி நேரத்திற்குள்’ மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தவறினாலும் இதேபோன்ற அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தேசிய நெடுஞ்சாலையில் பயன்படுத்தப்படும் ஆம்புலன்ஸ்கள், கிரேன்கள் மற்றும் ரோந்து வாகனங்களுக்கான சேவை நிலை ஒப்பந்தங்களை கடுமையாக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ், ஏறத்தாழ 3,000 ஆம்புலன்ஸ்களும், தலா 1,000 ரோந்து வாகனங்கள் மற்றும் கிரேன்களும் உள்ளன. இவை ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 50,000 கி.மீ. நெடுஞ்சாலைகளை உள்ளடக்கிய பகுதிகளில் சேவையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த வாகனங்கள் அனைத்தும் ஜிபிஎஸ் மற்றும் NHAI கேர் செயலியை இயக்கும் பிரத்யேக மொபைல் சாதனங்களையும் கொண்டுள்ளன.
இந்த கருவிகள் விபத்து நடந்த இடத்தின் தகவல்களை, மீட்பு வாகனங்களுக்கு அனுப்புவதோடு, அவசர காலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் பிற தரவுகளையும் பதிவு செய்கின்றன.
திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி, ஒரு நாளில் 1% நேரத்திற்கும் மேலாக வாகனத்தில் NHAI Care செயலி கிடைக்கவில்லை என்றால், ரூ. 2,500 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாகனத்தின் ஜிபிஎஸ் இயங்கவில்லை என்றாலும் இதேபோன்ற அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.