இந்தியா

அமர்நாத் யாத்திரை: பக்தர்களுக்கான விதிமுறைகள் வெளியீடு-பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

கடந்த ஏப்ரல் 15 முதலே இதற்கான முன்பதிவுகள் நாடு முழுவதும் உள்ள குறிப்பிட்ட வங்கி கிளைகள் மற்றும் ஆன்லைன் போர்ட்டல் மூலம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

உலகப் புகழ்பெற்ற இமயமலைப் பகுதியில் 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலுக்கு, இந்த ஆண்டிற்கான புனிதப் பயணம் வரும் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை மொத்தம் 57 நாட்களுக்கு நடைபெற உள்ளதாக ஸ்ரீ அமர்நாத்ஜி நற்பணி வாரியம் (SASB) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 15 முதலே இதற்கான முன்பதிவுகள் நாடு முழுவதும் உள்ள குறிப்பிட்ட வங்கி கிளைகள் மற்றும் ஆன்லைன் போர்ட்டல் மூலம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் தங்களின் பயணத்தை மேற்கொள்ள பஹல்காம் மற்றும் பால்தல் ஆகிய இரண்டு முக்கிய வழித்தடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, சமீபத்தில் புதுடெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அமர்நாத் யாத்திரைக்கான உயர்நிலைப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா மற்றும் ராணுவம், சிஆர்பிஎஃப் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பயணிகள் தங்கும் முகாம்கள், மருத்துவ வசதிகள், குடிநீர் மற்றும் தடையில்லா மின்சாரம் போன்ற அத்தியாவசியப் பணிகளுக்கான ஏற்பாடுகள் நடந்து முடிந்துள்ளன. மேலும், ட்ரோன் கண்காணிப்பு, AI தொழில்நுட்பம் மற்றும் முக அடையாளங்காட்டி சோதனைகள் மூலம் பல அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் பின்பற்ற வேண்டிய கட்டாய விதிமுறைகள்:

* வயது வரம்பு: 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கும், 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் அனுமதி இல்லை.

* கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடை: 6 வாரங்களுக்கு மேல் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த கடினமான மலைப்பயணத்தை மேற்கொள்ள முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

* கட்டாய மருத்துவச் சான்றிதழ்: அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களிடம் பெறப்பட்ட கட்டாய மருத்துவத் தகுதிச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் வழியில் யாத்திரைக்கான அனுமதியை பெற முடியும்.

* கட்டாய RFID கார்டு: ஜம்மு அல்லது காஷ்மீர் பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட மையங்களில் பயோமெட்ரிக் சரிபார்ப்புக்குப் பின் வழங்கப்படும் RFID கார்டை பக்தர்கள் தங்களின் கழுத்தில் எப்போதும் அணிந்திருக்க வேண்டும். இது பக்தர்களின் பாதுகாப்பைக் கண்காணிக்க உதவும் முக்கியமான லைஃப்லைன் ஆகும்.

* வானிலை எச்சரிக்கை: இமயமலைப் பகுதியில் வானிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்பதால், தடிமனான கம்பளி ஆடைகள், குடை, விண்ட்சீட்டர், ரெயின்கோட் மற்றும் வாட்டர்புரூஃப் காலணிகளை உடன் எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* சுற்றுச்சூழல் பாதுகாப்பு: அமர்நாத் யாத்திரை பாதைகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.