இந்தியா

அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்: காரணம் இதுதான்

அமர்நாத் குகைக் கோவிலை இதுவரை 3.77 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

காஷ்மீரில் ஆண்டுதோறும் நடைபெறும் அமர்நாத் யாத்திரை கடந்த 3-ம் தேதி தொடங்கியது. இந்த யாத்திரை ஆகஸ்டு 28-ம் தேதி நிறைவடையும்.

3.77 லட்சம் பேர் தரிசனம்

இதற்கிடையே, அமர்நாத் குகைக் கோவிலை இதுவரை 3.77 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில், வருடாந்திர அமர்நாத் யாத்திரைக்காக 4,640 பக்தர்களைக் கொண்ட புதிய குழு நேற்று அதிகாலை பகவதி நகர் யாத்ரி நிவாஸிலிருந்து புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

171 வாகனங்கள் கொண்ட அணிவகுப்பில் பயணிக்கும் 16-வது குழுவில், மத்திய காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள குறுகிய பால்டால் வழித்தடத்தில் 1,626 பக்தர்களும், தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பாரம்பரிய பஹல்காம் வழித்தடத்தில் இருந்து 3,014 பக்தர்களும் அடங்குவர்.

அதிகாரிகளின் தகவலின்படி, பால்டால் செல்லும் வாகன அணிவகுப்பு அதிகாலை 2:42 மணிக்கும், அதைத் தொடர்ந்து பஹல்காம் செல்லும் அணிவகுப்பு அதிகாலை 3:11 மணிக்கு முகாமிலிருந்து புறப்பட்டன.

இந்த யாத்திரைக்கான முன்பதிவு கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது. நபர் ஒருவர் ரூ.150 கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். மருத்துவ சான்றிதழ் ஒன்றையும் கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

உருகிய பனிலிங்கம்

நடப்பு ஆண்டில் 5 நாட்களில் 90 சதவீதம் அளவுக்கு பனிலிங்கம் உருகியது என்றாலும், பக்தர்களின் கூட்டம் குறையாமல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பக்தர்களின் பாதுகாப்பு கருதி யாத்திரை நிறுத்தப்படுகிறது. அதிகாரிகளுடன் ஒத்துழைத்து அடுத்த உத்தரவு வரும் வரை பக்தர்கள் யாத்திரை மேற்கொள்ள வேண்டாம்.

யாத்திரை எப்போது தொடங்கும் என்பதை வானிலை குறித்த விரிவான மதிப்பீடு, வழித்தடத்தில் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு உரிய காலத்தில் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாதா வைஷ்ணவி தேவி யாத்திரை

இதேபோல், ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் மாதா வைஷ்ணவி தேவி கோவிலுக்கான யாத்திரையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT