அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், கர்நாடக மாநில அரசின் உத்தரவாதக் குழுவின் துணைத் தலைவருமான சூரஜ் ஹெக்டே(55), நேற்று நள்ளிரவு பெங்களூருவில் காலமானார். திடீர் மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள எம்.எஸ்.ராமையா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு மனைவியும் இரு மகன்களும் உள்ளனர். அவரது உடல் பெங்களூரு ஹெப்பல் மயானத்தில் நாளை தகனம் செய்யப்பட உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சூரஜ் ஹெக்டே, கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சரான மறைந்த தேவராஜ் அர்சின் பேரன் ஆவார். முன்னதாக இந்திய இளைஞர் காங்கிரஸின் தேசியப் பொறுப்பாளராகவும், கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகவும் திறம்படப் பணியாற்றியுள்ளார். கர்நாடக அரசின் பல்வேறு நலத்திட்டங்களும், தேர்தல் வாக்குறுதி உத்தரவாதங்களும் அடித்தட்டு மக்களைச் சென்றடைவதில் முக்கியப் பங்காற்றினார். ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இந்நிலையில், அவரது இந்த பிரிவு காங்கிரஸ் பேரியக்கத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், சூரஜ் ஹெக்டே மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "சூரஜ் ஹெக்டேவின் மறைவு காங்கிரஸ் குடும்பத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. கட்சியின் கொள்கைகளில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். இளைஞர் காங்கிரஸ் பொறுப்பு என்பது அவருக்கு வெறும் கடமையாக மட்டும் இருக்கவில்லை; காங்கிரஸின் நீதி மற்றும் ஜனநாயக அர்ப்பணிப்பை முன்னெடுத்துச் செல்லும் பல இளம் தலைவர்களை அவர் உருவாக்கினார் என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,"அவரது இளம் வயதிலிருந்தே அவரை எனக்குத் தெரியும். எனது குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். தேவராஜ் அர்சின் பாரம்பரியத்தையும் விழுமியங்களையும் உண்மையாகக் கொண்டு சேர்த்தவர் சூரஜ்." என்றும், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் "அமைப்பைக் வலுப்படுத்துவதிலும், தொண்டர்களுடன் சிறந்த உறவைப் பேணுவதிலும் சூரஜ் ஹெக்டேவின் பங்களிப்பு இணையற்றது. ஒரு சிறந்த சக ஊழியரை இழந்து தவிக்கிறேன்." என்று சூரஜ் ஹெக்டேவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.