இந்தியா

டெல்லியில் பதற்றம்: ஏஐஎஸ்ஏ தலைவர் நேஹா போரா விடுவிப்பு- அபிஜீத் தீப்கே இன்று நீதிமன்றத்தில் ஆஜர்!

டெல்லி காவல் சட்டம் பிரிவு 65-ன் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, உரிய நடைமுறைகளுக்குப் பிறகு இன்று அதிகாலையில் அவர் விடுவிக்கப்பட்டார்.

ஜண்டேவாலன் பகுதியில் உள்ள தனது இல்லத்திலிருந்து கன்னாட் பிளேஸ் நோக்கிப் புறப்பட்ட சிஜேபி நிறுவனரான அபிஜீத் தீப்கேவை காவல்துறையினர் வழியிலேயே தடுத்து கைது செய்தனர்.

தலைநகர் டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களாக கடுமையான அரசியல் மற்றும் மாணவர் அமைப்புகளின் போராட்டங்கள் தொடர் கதையாகி வருகின்றன. வாக்காளர் தீவிர திருத்தப் பணிகளில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' மற்றும் அகில இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் இணைந்து தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

கடந்த அக்டோபர் 10-ஆம் தேதியன்று சிஜேபி கட்சியினர் நடத்திய தொடர் போராட்டங்கள் காரணமாக, மத்திய டெல்லி பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் சேவைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டன.

தேசிய கொடி ஏற்றும் போராட்டம்

இதற்கிடையே, டெல்லியில் போராட்டங்கள் நடத்த அனுமதிக்கப்பட்டிருந்த இடங்களின் பட்டியலிலிருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க ஜந்தர் மந்தர் பகுதியை நீக்கி டெல்லி காவல்துறை ஆணையர் அனுராக் குமார் அண்மையில் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இந்தத் தடை உத்தரவையும் மீறி, ஜந்தர் மந்தர் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தேசிய கொடி ஏற்ற முயன்ற சிஜேபி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளான சௌரவ் தாஸ் மற்றும் ஆசுதோஷ் ரன்கா ஆகியோர் ஏற்கனவே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, தற்போது திகாா் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஜந்தர் மந்தரிலிருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் உள்ள கன்னாட் பிளேஸ் பகுதியில் வெள்ளிக்கிழமையன்று மீண்டும் தேசிய கொடி ஏற்றும் போராட்டத்தில் பங்கேற்குமாறு சிஜேபி நிறுவனரான அபிஜீத் தீப்கே தனது ஆதரவாளர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்தார்.

இதனையடுத்து, கன்னாட் பிளேஸ் போராட்டத்தை நோக்கிச் செல்ல முயன்ற தலைவர்களை டெல்லி காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ஜண்டேவாலன் பகுதியில் உள்ள தனது இல்லத்திலிருந்து கன்னாட் பிளேஸ் நோக்கிப் புறப்பட்ட சிஜேபி நிறுவனரான அபிஜீத் தீப்கேவை காவல்துறையினர் வழியிலேயே தடுத்து கைது செய்தனர். இவர் மீது பாரதிய நாகரிக பாதுகாப்புச் சட்டம் பிரிவு 126 மற்றும் 170-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவரை இன்று பிற்பகலில் சிறப்பு நிர்வாக நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தத் டெல்லி காவல்துறை திட்டமிட்டுள்ளது. மண்டி ஹவுஸ் பகுதியில் போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற அகில இந்திய மாணவர் சங்கத் தலைவரான நேஹா போரா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டார். டெல்லி காவல் சட்டம் பிரிவு 65-ன் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, உரிய நடைமுறைகளுக்குப் பிறகு இன்று அதிகாலையில் அவர் விடுவிக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நேஹா போராவை காவல்துறையினர் டெல்லியின் பல்வேறு பகுதிகளுக்கு ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக அழைத்துச் சென்றதாகவும், நள்ளிரவு வரை அவர் எங்கு அடைக்கப்பட்டுள்ளார் என்ற விபரம் அவரது ஆதரவாளர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் ஏஐஎஸ்ஏ அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இறுதியில் அவரை ஆர்.கே. புரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

நள்ளிரவில் அவரைச் சந்திக்கச் சென்ற வழக்கறிஞர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நேஹா போராவுக்குத் தேவையான அவசர மருந்துகளை வழங்கக்கூட காவல்துறையினர் மறுத்துவிட்டதாக ஏஐஎஸ்ஏ குற்றம் சாட்டியுள்ளது. விடுவிக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நேஹா போரா, "நான் என்ன சொல்வது?" என்று சுருக்கமாகக் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்

டெல்லியில் தொடர்ந்து நிலவி வரும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கவும் போக்குவரத்து சீராக நடைபெறுவதை உறுதிப்படுத்தவும் கன்னாட் பிளேஸ் மற்றும் சென்ட்ரல் பார்க் பகுதிகளில் சுமார் 150-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அங்கு விரைவு அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் தற்போதும் பலத்த பாதுகாப்பு தொடர்கிறது.

SCROLL FOR NEXT