உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து டெல்லி நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், நடுவானில் எழுந்த புகை எச்சரிக்கை காரணமாக லக்னோவில் உள்ள செளத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
விமானம் உயரே பறந்து கொண்டிருந்தபோது, அதன் சரக்கு வைக்கும் பகுதியில் புகை வருவதற்கான எச்சரிக்கை மணிகள் ஒலித்துள்ளன. இதையடுத்து எச்சரிக்கையான விமானி, உடனடியாக லக்னோ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்புகொண்டு அவசரமாகத் தரையிறங்க அனுமதி கோரினார். அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, காலை 8:52 மணியளவில் விமானம் லக்னோ விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 155 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் காலை 9:02 மணியளவில் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
உடனடியாகச் செயல்பட்ட விமான நிலைய அவசரகால மீட்புக் குழு மற்றும் தீயணைப்புப் படையினர் விமானத்தைச் சோதனையிட்டனர். முதற்கட்ட ஆய்வில் சரக்குப் பகுதியில் புகையோ அல்லது தீப்பிடித்ததற்கான சுவடுகளோ எதுவும் கண்டறியப்படவில்லை. போலியான எச்சரிக்கை மணி ஒழித்ததா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்துப் பொறியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்தே விமானம் லக்னோவிற்கு திருப்பி விடப்பட்டதாகத் தெரிவித்துள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், பயணிகள் டெல்லி செல்வதற்கு மாற்று விமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் கோவாவில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானம் ஒன்றின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு அவசரமாகத் தரையிறக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு பயணிகள் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் விமானப் பயணிகள் மத்தியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.