இந்தியா

ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக 2 விமான நிலையங்களில் இருந்து சபரிமலைக்கு குளிர்சாதன பஸ்கள்

சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள், விமான நிலையங்களில் தங்குவதற்கும் ஓய்வெடுப்பதற்கும் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கேரளம் மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை வழிபாடுகள் தொடங்கி உள்ளன. இதற்காக நடை திறக்கப்பட்டது முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி வந்த வண்ணம் உள்ளனர். அவர்களது வசதிக்காக தேவசம்போர்டும், கேரளம் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன.

ஐயப்ப பக்தர்கள்

அதன் ஒருபகுதியாக வெளி மாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வரும் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக பம்பைக்கு குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களை இயக்க அரசு திட்டமிட்டது. அதன்படி திருவனந்தபுரம் மற்றும் கொச்சி நெடும்பாசேரி விமான நிலையங்களில் இருந்து இந்த பஸ்கள் இயக்கப்படுகின்றன. கேரள மாநில சாலைப் போக்குவரத்து கழகத்தின் இந்த குளிரூட்டப்பட்ட பஸ் சேவையை, திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மந்திரி சி.பி. ஜான் தொடங்கி வைத்தார்.

திருவனந்தபுரம் விமான நிலையம்

முன்னதாக சென்னை, பெங்களூரு மற்றும் ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் வந்த பக்தர்களுக்கு மலர்களையும், ஐயப்பனின் உருவப் படங்களையும் அவர் வழங்கினார். தொடர்ந்து அவர் கூறுகையில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து பம்பைக்கு ரூ.340 ஆகவும், கொச்சி நெடும்பச்சேரி விமான நிலையத்தில் இருந்து ரூ.380 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தச் சேவைகள் மண்டல-மகரவிளக்கு காலம் முழுவதும் செயல்படும். விமானத்தில் வருபவர்கள் மட்டுமின்றி, முன்பதிவு செய்யும் அனைத்துப் பயணிகளும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

கூடுதல் பஸ் சேவைகள்

மேலும் தேவைக்கேற்ப கூடுதல் பஸ் சேவைகள் அறிமுகப்படுத்தப்படும். திருவனந்தபுரத்தில் இருந்து பம்பைக்குச் செல்லும் பஸ் இரவு 9.30 மணிக்கு கிளம்பி, மறுநாள் இரவு 7 மணிக்கு மீண்டும் விமான நிலையத்தை வந்தடையும். நெடும்பச்சேரியிலிருந்து செல்லும் பஸ் இரவு 8.30 மணிக்கு கிளம்பி, இரவு 7 மணிக்கு விமான நிலையத்தை வந்தடையும். மேலும், சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள், விமான நிலையங்களில் தங்குவதற்கும் ஓய்வெடுப்பதற்கும் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இருமுடி

இது தவிர, கேரள அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு ‘சார்டர்டு’ பஸ் சேவைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், பக்தர்கள் பஸ் நிலையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள், தங்கள் வீடுகளுக்கு அருகிலோ அல்லது கோயில்களுக்கு அருகிலோ இருந்த படியே பஸ்களில் ஏறிக் கொள்ளலாம். பக்தர்கள் தங்கள் ‘இருமுடி’யைத் தயார் செய்துகொண்டு, அங்கிருந்தே பயணத்தை தொடங்க இது வழிவகை செய்கிறது. பயணிகள் குழுக்கள் மற்றும் அமைப்புகள் பஸ்களை முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளலாம்.

பயணிகளின் எண்ணிக்கை, ஏறும் இடம், பயணம் மேற்கொள்ளும் தேதி, நேரம் மற்றும் பயண கால அளவு ஆகியவற்றிற்கு ஏற்ப பஸ் சேவைகள் ஏற்பாடு செய்யப்படும். பக்தர்கள் தங்கள் ஊர்களிலிருந்து நேரடியாக பம்பைக்குச் சென்று, மீண்டும் அதே இடத்திற்குத் திரும்பி வர முடியும் என்றும் மந்திரி ஜான் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT