இந்தியா

வேலைக்கு போக பயந்து AI-யில் போலி புலி வீடியோ... கர்நாடக வாலிபருக்கு வனத்துறை கொடுத்த நூதன தண்டனை!

போலி புலி வீடியோ பரப்பிய வாலிபருக்கு 50 தோப்புக்கரணம் தண்டனை கொடுத்த வனத்துறை!

கர்நாடகாவில் சோம்பேறித்தனத்தால் வேலைக்குச் செல்ல பயந்த வாலிபர் ஒருவர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புலி வீடியோ ஒன்றை உருவாக்கி சமூக வலைதளங்களில் பரப்பிய வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.

சம்பவத்தின் பின்னணி

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தின் டவுன் பகுதியில் உள்ள காவலி கிராமத்தைச் சேர்ந்த 25 வயது வாலிபரான ஈரண்ணாவுக்கு, வனப்பகுதியை ஒட்டியவாறு ஒரு தோட்டம் சொந்தமாக உள்ளது.

அந்தத் தோட்டத்திற்குச் சென்று வேலை பார்க்குமாறு அவரது குடும்பத்தினர் ஈரண்ணாவைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர்.

குடும்பத்தினரின் தொல்லையிலிருந்து தப்பிக்க நினைத்த ஈரண்ணா, தனது தோட்டத்தில் ஒரு புலி உலா வருவது போன்ற காட்சியை ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியுடன் போலியாக ஒரு வீடியோவாகத் தயாரித்தார்.

பின்னர் அதைத் தனது குடும்பத்தினரிடம் காட்டி, "தோட்டத்தில் புலி சுற்றுகிறது, என்னால் வேலைக்குச் செல்ல முடியாது" என்று கூறி தப்ப முயன்றுள்ளார்.

மேலும், அந்த வீடியோவை சமூக வலைதளங்களிலும் அவர் பதிவிட, அது காட்டுத்தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வனத்துறை விசாரணை மற்றும் அம்பலமான உண்மை

வீடியோவை உண்மை என்று நம்பிய ஈரண்ணாவின் குடும்பத்தினரும், கிராம மக்களும் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு அச்சத்துடன் தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் ஈரண்ணாவின் தோட்டத்திற்கு விரைந்து சென்று தீவிரமாக ஆய்வு செய்தனர்.

ஆனால், தோட்டம் முழுவதும் தேடியும் புலியின் கால் தடங்கள் எதுவும் சிக்காததால் அதிகாரிகளுக்குச் சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து ஈரண்ணாவை நேரில் அழைத்து வனத்துறையினர் தங்களது பாணியில் விசாரித்தனர்.

அதிகாரிகளின் கிடுக்கிப்பிடி விசாரணையில், தான் வேலைக்குச் செல்வதைத் தவிர்ப்பதற்காகவே ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் போலி புலி வீடியோவை உருவாக்கி சமூக வலைதளத்தில் பரப்பியதை ஈரண்ணா ஒப்புக்கொண்டார்.

அதிகாரிகளின் நூதன தண்டனை

பொய்யான தகவலைப் பரப்பி கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தியதற்கும், வனத்துறையினரின் பொன்னான நேரத்தை வீணடித்ததற்கும் ஈரண்ணாவுக்கு ஒரு படிப்பினையான நூதன தண்டனையை அதிகாரிகள் வழங்கினர்.

ஈரண்ணாவை அவரது தோட்டத்திற்கே அழைத்துச் சென்ற வனத்துறையினர், அங்கிருந்த கிராம மக்கள் அனைவரின் முன்னிலையிலும் அவரை 50 தோப்புக்கரணம் போட வைத்தனர்.

அதோடு நின்றுவிடாமல், இனிமேல் இதுபோன்ற ஆபத்தான மற்றும் போலி வேலைகளில் ஈடுபடக் கூடாது என்று அவரைக் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், ஈரண்ணா தோப்புக்கரணம் போடும் அந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்களிடையே வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT