இந்தியா

AI மூலம் மருத்துவ விளம்பரங்களுக்கு தடை - தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு!

போலி நோயாளி சான்றுகள், 100% குணம் விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி; மீறினால் பதிவு நீக்கம் வரை தண்டனை

மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் நோயாளிகளின் சான்றுகள், சிகிச்சையின் முடிவுகள் அல்லது விளம்பரப் பொருட்களை உருவாக்க செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்தக் கூடாது என்று தேசிய மருத்துவ ஆணையம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டு உடனடியாக அமல்படுத்தியுள்ளது.

ஏ.ஐ. பயன்படுத்த தடை

பதிவுசெய்த மருத்துவ பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவமனைகள் தங்களது சேவைகளை விளம்பரப்படுத்தவோ, நோயாளிகளை ஈர்க்கவோ அல்லது நோயறிதல், சிகிச்சை மற்றும் அதன் முடிவுகள் குறித்து சரிபார்க்க முடியாத தகவல்களை பரப்பவோ செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் உள்ளடக்கங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு கொண்டு போலியான நோயாளிகளின் குரல்கள், சான்றுகள், சிகிச்சை முடிவுகள் அல்லது தவறான ஆதரவு உரைகளை உருவாக்குவதும், மருத்துவ சேவைகளின் தன்மையை தவறாக சித்தரிப்பதும் முழுமையாக தடுக்கப்பட்டுள்ளது.

செயலி மற்றும் இணையதள தேடல்களில் தங்கள் நிறுவனங்களின் தரவரிசையை உயர்த்த பணம் வழங்குவதற்கும் மருத்துவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ ஆலோசனை

மேலும் சிறந்த, முதன்மையான, மிகவும் நம்பகமான, உத்தரவாதமளிக்கப்பட்ட குணமளிப்பு அல்லது 100 சதவீத வெற்றி போன்ற ஆதாரமற்ற கோரிக்கைகளை மருத்துவர்கள் முன் வைக்கக்கூடாது.

நோயாளிகளை பெறுவதற்காக பணம் வழங்கும் அடிப்படையில் சமூக வலைதள பிரபலங்கள், விளம்பர நிறுவனங்கள் அல்லது இணைய தளங்களுடன் மருத்துவர்கள் ஒப்பந்தம் செய்ய முடியாது.

தேவையில்லாத மருத்துவ ஆலோசனைகளை ஊக்குவிக்கும் வகையில் குறுகிய கால தள்ளுபடி சலுகைகள், கூப்பன்கள், பரிசுப்பொருட் கள் அல்லது பரிந்துரை நன்மைகளை வழங்கவும் மருத்துவமனைகளுக்கு அனுமதி இல்லை.

இருப்பினும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் பொதுமக்களுக்கு கல்வி புகட்டும் நோக்கில் உண்மையான ஆரோக்கிய தகவல்களையும், தங்களின் மருத்துவமனை பற்றிய பொதுவான விவரங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்வதற்கு கட்டுப்பாடு ஏதும் இல்லை.

கடும் நடவடிக்கை

முறையான அனுமதி இல்லாமல் நோயாளிகளின் புகைப்படங்களை பயன்படுத்துவதற்கும், நோயாளிகளிடம் முறையற்ற எதிர்பார்ப்புகளை உருவாக்கும் வகையிலான சான்றுகள் மற்றும் சிகிச்சைக்கு முந்தைய, பிந்தைய படங்களை பரப்புவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகளை மீறுவோருக்கு கடுமையான தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் முறை தவறு செய்தால் எச்சரிக்கையுடன் கட்டாய அறநெறி பயிற்சியும், 2-வது முறை தவறு செய்தால் கண்டனத்துடன் பண அபராதமும் விதிக்கப்படும்.

3-வது முறை மீறினால் 3 முதல் 6 மாதங்கள் வரையிலும், கடுமையான விதிமீறல்களுக்கு 6 முதல் 12 மாதங்கள் வரையிலும் பணி இடைநீக்கம் செய்யப்படும்.

தொடர்ச்சியாக விதிகளை மீறும் மருத்துவர்களின் பெயர்கள் மருத்துவ பதிவேட்டில் இருந்து 2 முதல் 3 ஆண்டுகள் வரை நீக்கப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் எச்சரித்துள்ளது.

SCROLL FOR NEXT