தங்க பிஸ்கெட்டுகள்  
இந்தியா

ரூ. 4.26 கோடி மதிப்பு.. விமான கழிவறையில் கடத்தப்பட்ட 24 தங்க பிஸ்கெட்டுகள் பறிமுதல்

இந்த தங்கப் பிஸ்கட்டுகளின் மொத்த எடை சுமார் 2.8 கிலோ ஆகும்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த விமானத்தில் ரூ.4.26 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

சோதனை

இன்ஸடிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவது குறித்து தகவல் அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள், விமானம் அகமதாபாத்தில் தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு விமானத்திற்குள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

பிஸ்கட்டுகள்

அப்போது விமானத்தின் முன்பகுதியில் உள்ள கழிவறையை சோதனை செய்தபோது, அங்குள்ள ஸ்பீக்கர் பாக்ஸிற்குள் கருப்பு நிற பிளாஸ்டிக் டேப் மூலம் சுற்றப்பட்ட இரண்டு பைகள் கண்டறியப்பட்டது.

அந்தப் பைகளைப் பிரித்துப் பார்த்தபோது, அதற்குள் வெளிநாட்டு முத்திரையுடன் கூடிய 24 வெளிநாட்டுத் தங்கப் பிஸ்கட்டுகள் இருந்தன.

இந்த தங்கப் பிஸ்கட்டுகளின் மொத்த எடை சுமார் 2.8 கிலோ ஆகும். இவற்றின் உள்ளூர் சந்தை மதிப்பு ரூ.4.27 கோடி என சுங்கத்துறை மதிப்பிட்டுள்ளது.

கடத்தல்

துபாயில் இருந்து விமானத்தில் ஏறிய சர்வதேசக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த நபர் ஒருவர், இந்தத் தங்கத்தைக் கழிவறையில் மறைத்து வைத்துவிட்டு, அகமதாபாத்தில் சுங்கச் சோதனையைக் கடந்து தப்பியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இங்கிருந்து உள்நாட்டுப் பாதையில் இந்த விமானம் அடுத்து இயக்கப்படும் போது, அதிலிருக்கும் ஏதேனும் ஒரு தூய்மைப் பணியாளர் அல்லது உள்நாட்டுப் பயணி மூலம் இதை வெளியில் கடத்தத் திட்டம் தீட்டப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

விமானத்தின் பயணிகள் பட்டியலை வைத்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.