Ahmedabad firecracker factory accident 
இந்தியா

அகமதாபாத் பட்டாசு ஆலை வெடி விபத்து: 8 தொழிலாளர்கள் பலி, 12 பேர் காயம்

பட்டாசு தொழிற்சாலை ஒரு தற்காலிக குடிசை போன்ற இடத்தில் இயங்கி வந்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 8 தொழிலாளர்கள் பரிதாபகமாக உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.

விபத்து

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மஹ்மூத்புரா பகுதியில் இயங்கி வந்த மெஹுல் தோடியா என்பவருக்கு சொந்தமான டேலண்ட் பயர்ஒர்க்ஸ் பட்டாசு தொழிற்சாலையில் இன்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

தொழிலாளர்கள் இன்று பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் தப்பிக்க முடியாமல் ஆலைக்குள்ளேயே சிக்கினர்.

விபத்து குறித்துத் தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தீ விபத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

மேயர்

விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட அகமதாபாத் மேயர் ஹிதேஷ் பாரோட் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த பட்டாசு தொழிற்சாலை ஒரு தற்காலிக குடிசை போன்ற இடத்தில் இயங்கி வந்துள்ளது. அதுவே தீ மிக வேகமாகப் பரவக் காரணமாக அமைந்துள்ளது" என்று தெரிவித்தார்.

மோடி இரங்கல்

அகமதாபாத் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

"குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் மக்கள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். இந்தத் துயரமான நேரத்தில், எனது எண்ணங்கள் யாவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடனேயே உள்ளன.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன். உள்ளூர் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ.50,000-மும் நிவாரண தொகையாக வழங்கப்படும்" என்று அறிவித்துள்ளார்.