இந்தியா

தாய்லாந்து விமான சம்பவ எதிரொலி: அனைத்து விமானிகளுக்கும் போதைப் பொருள் பரிசோதனையை கட்டாயமாக்கிய ஏர் இந்தியா!

தாய்லாந்தில் இருந்து டெல்லி வந்த விமானத்தின் விமானி கஞ்சா பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் இருந்து டெல்லி வந்த விமானத்தின் விமானி போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனம் தனது குழுமத்தின் அனைத்து விமானிகளுக்கும் போதைப்பொருள் பரிசோதனையைக் கட்டாயமாக்கியுள்ளது.

இந்த சோதனை விதிமுறை இன்றுமுதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியாவின் இந்த திடீர் நடவடிக்கை ஏன்?

ஆக.4ம் தேதியன்று தாய்லாந்தின் புக்கெட் நகரிலிருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் திடீரென 300 அடி கீழே சரிந்தது. இந்த திடீர் குலுங்கலால் விமான ஊழியர்கள் உட்பட பயணிகள் பலர் காயமடைந்தனர்.

விமானம் தரையிறங்கியதும் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அந்த விமானத்தின் முதன்மை கேப்டன் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது உறுதியானது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட இரு விமானிகளும் உடனடியாகப் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஏர் இந்தியா தனது ஊழியர்களுக்கு பல்வேறு புதிய நடவடிக்கைகளை கொண்டுவந்துள்ளது. அதுதொடர்பாக ஊழியர்களுக்கும் சுற்றறிக்கை விடுத்துள்ளது.

புதிய விதிமுறை என்ன?

அந்த சுற்றறிக்கையின்படி, ஏர் இந்தியா மற்றும் அதன் குறைந்த கட்டணச் சேவையான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களின் அனைத்து விமானிகளுக்கும் இந்த சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குருகிராமில் உள்ள ஏர் இந்தியா பயிற்சி மையம் அல்லது விமானப் பயணம் முடிந்து விமானிகள் கலந்துகொள்ளும் சந்திப்புக் கூட்டங்கள் அல்லது ஏர் இந்தியா தலைமை அலுவலகங்கள் மற்றும் விமானிகள் தங்கியிருக்கும் தளங்களில் எங்காவது இந்த சோதனை போதைப்பொருள் பயன்பாடு சோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.