இந்தியா

அதானிக்கு சிக்கல் - ஊழல் குற்றச்சாட்டு வழக்கை உடனடியாக முறைப்படி தள்ளுபடி செய்ய நீதிபதி மறுப்பு

அமெரிக்க முதலீட்டாளர்களிடம் 3 பில்லியன் டாலரைப் பெறுவதற்காக ஊழலை மறைத்ததாக கெளதம் அதானி மீது வழக்கு தொடரப்பட்டது.

அதானி ஊழல் குற்றச்சாட்டு:

இந்திய அரசு அதிகாரிகளுக்கு சூரிய மின்சக்தி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்குமாறு 265 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதானி குழுமத்தின் மீது கடந்த 2024 ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்டது.

மேலும் இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து, அமெரிக்க முதலீட்டை பெற்றதாக கெளதம் அதானி மீது வழக்கு தொடரப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக அமெரிக்கப் பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையம் தொடர்ந்த இந்த வழக்கில் தங்களது குற்றத்தை ஒப்புக்கொள்ளாமலும், அதே சமயம் மறுக்காமலும் கெளதம் அதானி 6 மில்லியன் டாலர் மற்றும் சாகர் அதானி 12 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த விவகாரத்தை முழுமையாக ஆய்வு செய்த பிறகு, மேலும் கூடுதல் நேரத்தை செலவிட அமெரிக்க நீதித்துறை விரும்பவில்லை என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் புரூக்ளினை தளமாக கொண்ட அமெரிக்க மாவட்ட நீதிபதி நிக்கோலஸ் கரோஃபிஸிடம் இந்த வழக்கை உடனடியாக முறைப்படி தள்ளுபடி செய்யுமாறு அதானி வழக்கறிஞர்கள் வாதாடினர்.

அதானிக்கு காலக்கெடு விதித்த அமெரிக்க நீதிபதி:

இதையடுத்து தொழிலதிபர் கெளதம் அதானி மீதான குற்றவியல் வழக்கை தள்ளுபடி செய்யுமாறு வழக்கறிஞர்கள் விடுத்த கோரிக்கைக்கு உடனடியான தீர்ப்பு வழங்க அமெரிக்க நீதிபதி மறுத்துவிட்டார்.

மேலும் இந்த வழக்கை கைவிடுவதற்கான தங்களது முடிவை நியாயப்படுத்தும்படியும் வழக்கறிஞர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதுகுறித்தான ஒரு விரிவான விளக்கத்தை அதானி தரப்பு வழக்கறிஞர்கள் ஜூலை 13, 2026-க்குள் சமர்ப்பிக்கும்படியும் காலக்கெடு விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.