மும்பையில் உள்ள ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் நடிகர் இம்ரான் கான் கலந்துகொண்டார்.
தலைநகர் டெல்லி மற்றும் இதர பகுதிகளில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக நடிகர் இம்ரான் கான் மும்பை உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற போராட்டங்களில் பங்கேற்க மாட்டேன் என அவர் உறுதியளித்துள்ளார். வெளிநாட்டு குடிமகனாகவும், வெளிநாட்டு இந்திய குடியுமரிமை அட்டைதாரராகவும் உள்ள இம்ரான் கானுக்கு இந்திய குடிமக்களை போன்ற சமமான உரிமைகள் கிடையாது என்று நீதிமன்றம் கடுமையாக சுட்டிக்காட்டியுள்ளது.
மும்பையில் உள்ள ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் நடிகர் இம்ரான் கான் கலந்துகொண்டார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அவரை காவல்துறையினர் தற்காலிகமாக கைது செய்தனர். இதனையடுத்து, வெளிநாட்டவர் மற்றும் குடிவரவு விதிகளை மீறியதாகக் கூறி வெளிநாட்டவர் பிராந்திய பதிவு அலுவலகம் அவருக்கு 'நாட்டைவிட்டு வெளியேறுங்கள்'என்ற நோட்டீசை பிறப்பித்தது. இதை எதிர்த்து இம்ரான் கான் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், ஒரு ஓசிஐ அட்டைதாரர் இந்திய குடிமக்களை போலவே அனைத்து உரிமைகளையும் கோர முடியாது என்று தெளிவுபடுத்தியது. பிரபல நடிகர் என்ற முறையில் உங்களைப் பின்பற்றுபவர்கள் அதிகம் உள்ளதால், பொதுவெளியில் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும்போது மிகுந்த பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் எச்சரித்தது. வெறும் விளக்கமளிப்பது மட்டும் போதாது என்றும், நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக நிபந்தனையற்ற மன்னிப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியது.
நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை ஏற்று நடிகர் இம்ரான் கான் தரப்பில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரப்பட்டதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபட மாட்டேன் என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதை பரிசீலித்த உயர் நீதிமன்றம், அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த நாட்டைவிட்டு வெளியேறும் நோட்டீசின் மீதான தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இது தொடர்பான உரிய நடைமுறைகளை FRRO நிறுவனம் மேற்கொள்ளும் வரை அவர் இந்தியாவில் தொடர்ந்து தங்குவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.