இந்தியா

கர்நாடகாவில் அதிரடி: "வாக்குரிமை இல்லை எனில் அரசு சலுகைகளும் இல்லை"-டி.கே.சிவகுமார் எச்சரிக்கை!

இன்று முதல் ஜூலை 29 வரை தேர்தல் ஆணைய அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் கணக்கெடுப்புப் பணியை நடத்தவுள்ளனர்.

கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் தீவிர திருத்தப் பணி (SIR) தொடங்கியுள்ள நிலையில், அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மக்களுக்குக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், அரசின் இலவசத் திட்டங்கள் மற்றும் சலுகைகளை இழக்க நேரிடும் என டி.கே.சிவகுமார் எச்சரித்துள்ளார். மேற்கு வங்கத்தில் தகுதியற்ற ரேஷன் கார்டுதாரர்களை நீக்க இந்த முறை பயன்படுத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், "வாக்களிக்கும் உரிமை என்பது வாழ்வதற்கான உரிமை" எனக் குறிப்பிட்டுள்ளார். இன்று முதல் ஜூலை 29 வரை தேர்தல் ஆணைய அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று இந்த கணக்கெடுப்புப் பணியை நடத்தவுள்ளனர்.

வீடு வீடாகக் கணக்கெடுப்பு:

கர்நாடகா முழுவதும் உள்ள சுமார் 5.5 கோடி வாக்காளர்களை உள்ளடக்கி இந்தச் சீரமைப்புப் பணி நடைபெறுகிறது. இதற்காக 59,050 வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளும், 7,500-க்கும் மேற்பட்ட மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள் ஜூன் 16, 2026 நிலவரப்படி பட்டியலில் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று படிவங்களை வழங்குவார்கள்.

படிவங்கள் வழங்கப்பட்ட வீடுகளில் 'ஊதா நிற சதுர ஸ்டிக்கரும்', பூட்டப்பட்டிருக்கும் வீடுகளில் "சிவப்பு நிற வட்ட ஸ்டிக்கரும்" ஒட்டப்படும். பூட்டிய வீடுகளுக்கு அதிகாரிகள் குறைந்தது 3 முறை நேரில் செல்வார்கள்.

மக்கள் தங்களின் இருப்பிடச் சான்றை எளிதாக சமர்ப்பிக்க ஏதுவாக, கர்நாடக அரசு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாக 'நிரந்தர குடியிருப்பு சான்றிதழ்' வழங்கும் புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதனை 'சேவா சிந்து' போர்ட்டல் அல்லது பெங்களூரு ஒன், கர்நாடகா ஒன் போன்ற மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, இந்தச் சீரமைப்பின் அடிப்படையிலான வரைவு வாக்காளர் பட்டியல் 'ஆகஸ்ட் 5' அன்றும், இறுதி வாக்காளர் பட்டியல் 'அக்டோபர் 7' அன்றும் வெளியிடப்பட உள்ளது. பொதுமக்கள் இந்தத் திருத்தப் பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அன்பு குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.