வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொள்ள வருகை தந்த அவர், தற்போதைய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது சந்தேகம் எழுப்பியுள்ளார்.
நாட்டில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் முறை உறுதி செய்யப்படும் வரை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்படும் என்று காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொள்ள வருகை தந்த அவர், தற்போதைய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது சந்தேகம் எழுப்பியுள்ளார்.
கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அபிஜித் தீப்கே, தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையின் கீழ் நடைபெறும் தேர்தல்களை ஒருபோதும் நம்ப முடியாது என்று குற்றம்சாட்டினார். ஒற்றைக் கட்சிக்கு சாதகமான முறையில் தேர்தல்கள் கையாளப்படுவதாகவும், இதற்கான பல சான்றுகள் நம் கண்முன்னே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டில் சுதந்திரமான மற்றும் நடுநிலையான தேர்தல் அமைப்பு முறை மீட்கப்படும் வரை தங்களது சட்டப்பூர்வமான போராட்டம் ஓயாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
கொச்சியில் நடைபெற்ற 'ஜந்தர் மந்தர் பாணி' ஆர்ப்பாட்டத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், குறிப்பாக கேரளாவில் இருந்தும் ஏராளமான இளைஞர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். சி.ஜே.பி. கட்சியின் அதிகாரப்பூர்வ தரவுத்தளத்தின்படி, நாடு முழுவதிலும் உள்ள பதிக்கப்பட்ட உறுப்பினர்களில் அதிகமானோர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்ட அபிஜித் தீப்கே, மாநிலத்தின் இளைஞர்கள் ஜனநாயகத்தைக் காக்க வீதிகளில் இறங்கிப் போராடுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
கேரளாவின் கொச்சி நகரில் உள்ள மரைன் டிரைவ் பகுதியில் சி.ஜே.பி. சார்பில் நடைபெற்ற இந்த மாபெரும் கண்டனப் பேரணியில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர். வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், தலைமைத் தேர்தல் ஆணையர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் மாணவரணித் தலைவர்கள் இந்தப் பேரணிக்குத் தலைமை தாங்கி ஆதரவு தெரிவித்தனர். தேசியக் கொடிகளை ஏந்தியவாறு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வு தேசிய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.