SIR விவகாரத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று சிஜேபி போராட்டம் நடத்தி வருகிறது. கடந்த 10-ந்தேதி சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே போராட்டத்திற்காக டெல்லி வந்தார். அப்போது, போலீசார் விமானத்தில் வைத்து அவரை கைது செய்தனர். பின்னர் தடுப்புக்காவலில் வைத்தனர்.
மறுதினம், மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கமாட்டேன் என அமைதி பத்திரத்தில் கையெழுத்திட்டார். அதன்பின் விடுதலை செய்யப்பட்டார்.
இதற்கிடையே சிஜேபி கட்சியின் அஷுடோஷ் ரங்கா, சவுரவ் தாஸ் ஆகியோர் தடைவிதிக்கப்பட்ட ஜந்தர் மந்திரில் தடுப்பு வேலிகளை தாண்டிச் சென்று தேசியக்கொடியுடன் போராட்டம் நடத்தினார். இதனால் போலீசார் இருவரையும் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தினர்.
நீதிபதி இருவருக்கும் ஐந்து நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரையும் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்ப தெரிவிக்கும் வகையில் நேற்று தேசியக்கொடி ஏந்தி பேரணி நடத்தப்படும் என்று சி.ஜே.பி. தெரிவித்தது.
இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற அபிஜீத் தீப்கே நேற்று தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர் தடுப்புக்காவலில் கைது செய்யப்பட்டார்.
இவர் இன்று மாஜிஸ்திரேட் முன் கைது செய்யப்பட்டார். அப்போது 50 ஆயிரம் ரூபாய் பிணை பத்திரம் வழங்கி ஜாமின், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கமாட்டேன் என அறிவித்து செல்லலாம் என நீதிபதி அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் மந்திர் மார்க் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்தார். வெளியே வந்த அவர், ஷாருக்கான் 22 வருடத்திற்குப் பிறகு பாகிஸ்தானில் இருந்து வெளியே வரும் ஒரு படத்தின் போட்டோவை அப்லோடு செய்து, வைஃபை (wifi) மற்றும் தொலைபேசி வசதி ஏதுமின்றி, 24 மணிநேரம் சிறையில் கழித்த பிறகு வெளியே வரும்போது எப்படி இருக்கும்? என்பதை பதிவு செய்துள்ளார்.
அபிஜீத் தீப்கே உடன் AISA தலைவர் நேஹா போரா நேற்று கைது செய்யப்பட்டார். அவர் இன்று காலை விடுவிக்கப்பட்டார்.