டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு காவல்துறை பேருந்தை மறிக்க முயன்ற பெண்ணின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தேர்தல் முறைகேடுகள், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) குறித்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.
கடந்த ஜூலையில் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக போராடி தர்மேந்திர பிரதானை மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகச் செய்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தற்போது ஞானேஷ் குமாருக்கு எதிராக களமிறங்கியுள்ளது.
டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் நேற்று காந்தி ஜெயந்தியை மையமிட்டு ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டங்களை தொடங்கியுள்ளது. மேலும் காங்கிரஸ் மற்றும் பல்வேறு சமூக செயல்பாடு அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன.
நேற்று டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, Citizens for Justice and Peace மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை டெல்லி போலீசார் கைது செய்து பேருந்துகளில் ஏற்றிச் சென்றனர்.
அப்போது அங்கு நின்றிருந்த ஒரு பெண், நகர்ந்து கொண்டிருந்த காவல்துறை பேருந்தின் முன்பாக நின்று, தனது வெறும் கைகளால் பேருந்தை முன்னோக்கிச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்த முயன்றார்.
எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவின்படி, சம்பவம் நடந்த நேரத்தில் அங்கு பெண் காவல்துறை அதிகாரிகள் யாரும் இல்லை. இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்த விவரங்களும் இன்னும் தெரியவில்லை.
இதனிடையே இந்தக் காட்சியைப் பார்த்த இணையவாசிகள், சில மாதங்களுக்கு முன்பு மும்பையில் மாடல் ரியா அஹிர் செய்த செயலுடன் ஒப்பிட்டு, பல்வேறு விதங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஜூலை 2026ல் மும்பையில் நடந்த தர்மேந்திர பிரதானுக்கு எதிரான போராட்டங்களின் போது, மாடலிங் துறையில் பணியாற்றும் ரியா அஹிர் என்ற இளம்பெண், மாணவர்களை ஏற்றிச் சென்ற ஒரு காவல்துறை வேனை மறித்தார்.
மழையில் நனைந்தபடியே சுமார் 40 நிமிடங்கள் வாகனத்தை முன்னோக்கிச் செல்ல விடாமல் அவர் தடுத்த செயல், அந்த நேரத்தில் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தின் மூலம் அவர் சமூக ஊடகங்களில் வைரலானார்.