மகாராஷ்டிராவை சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார். அவருக்கு வயது 75.
மகாராஷ்டிராவை சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் இன்று காலமானார். அவருக்கு வயது 75. அவரது மரணச் செய்தி திரைத்துறையினர், ரசிகர்கள் என அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் 2008-ம் ஆண்டு வெளியான ‘பொம்மலாட்டம்’ படத்தில் நடித்திருந்தார் நானா படேகர்.
அதனை தொடர்ந்து கடைசியாக தமிழில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான ‘காலா’ படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் கவனத்தை நானா படேகர் ஈர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நானா படேகர் மறைவுக்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
நானா படேகரைப் போல அசாத்தியமான தீவிரமும், தனித்துவமும், கம்பீரமான ஆளுமையும் கொண்ட நடிகர்கள் மிகச் சிலரே
அவர் ஏற்று நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனது பன்முகத் திறமையையும் படைப்பாற்றலையும் வழங்கி, தலைமுறை தலைமுறையாக நினைவுகூரும் பல பாத்திரங்களை அவர் உருவாக்கியுள்ளார்.
தான் எதை நம்புகிறாரோ அதை எவ்விதத் தயக்கமும் இன்றி வெளிப்படையாகப் பேசும் அவரது தைரியமான பார்வைக்காக அவர் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளார்.
இந்தி மற்றும் மராத்தி திரையுலகிற்கு நானா படேகர் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. அவரது மறைவு திரையுலகில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், எண்ணற்ற ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.