இந்தியா

"காலத்தால் அழியாத குரல்..!"- ஆஷா போஸ்லே மறைவுக்கு பிரதமர் மோடி உருக்கம்

ஆஷா போஸ்லேவின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மூத்த பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92) உடல் நலக்குறைவு காரணமாக தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

ஆஷா போஸ்லேவுக்கு நேற்று மதியம் வீட்டில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில், ஆஷா போஸ்லேவின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் பன்முகக் குரல்களில் ஒருவரான ஆஷா போஸ்லே அவர்களின் மறைவால் நான் ஆழ்ந்த வருத்தம் அடைகிறேன்.

பல தசாப்தங்களாக நீடித்த அவரது தனித்துவமான இசைப் பயணம், நமது கலாச்சாரப் பாரம்பரியத்தை வளப்படுத்தியதுடன், உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற மக்களின் இதயங்களைத் தொட்டது.

மனதை வருடும் மெல்லிசைகள் முதல் எழுச்சியூட்டும் இசையமைப்புகள் வரை, அவரது குரல் காலத்தால் அழியாத ஒரு பிரகாசத்தைக் கொண்டிருந்தது. அவருடனான எனது உரையாடல்களின் நினைவுகளை நான் என்றென்றும் போற்றிப் பாதுகாப்பேன்.

அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் இசை ஆர்வலர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவர் வருங்கால சந்ததியினருக்கு தொடர்ந்து உத்வேகம் அளிப்பார். மேலும் அவரது பாடல்கள் மக்களின் வாழ்வில் என்றென்றும் எதிரொலிக்கும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.