இந்தியா

அசுத்தத்தின் அடையாளம்.. ராம்லீலாவில் ராவணன் உருவ பொம்மையுடன் 30 அடி உயர 'கரப்பான்பூச்சி' உருவ பொம்மையை எரிக்க முடிவு

இன்று மாலை கண்டோன்மென்ட் பிளாசாவில் உள்ள சென்டர் பூங்காவில் சிஜேபி தேசிய கொடி பேரணி நடத்த உள்ளது.

ராம்லீலா விழாவில் கரப்பான் பூச்சி உருவபொம்மையை எரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) போராட்டங்கள் அரசியல் ரீதியாக சூடுபிடித்துள்ள நிலையில், இந்த ஆண்டு தசராவை முன்னிட்டு ராம்லீலா விழாவில் ராவணன், கும்பகர்ணன், மேக்னா ஆகியோரின் உருவ பொம்மைகளுடன், 30 அடி உயர 'கரப்பான்பூச்சி' உருவ பொம்மையையும் எரிக்க அமைப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

டெல்லியின் பிதாம்பூரில் ராமலீலாவை ஏற்பாடு செய்யும் ஸ்ரீ கேசவ் ராமலீலா சமிதியால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அசுத்தம்

"கரப்பான் பூச்சியானது குப்பையையும் அசுத்தத்தையும் குறிக்கிறது. ஸ்வச் பாரத் மற்றும் ஸ்வச் டெல்லி பிரச்சாரங்களின் ஒரு பகுதியாக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது" என்று அக்குழு தெரிவித்தது.

குழுவின் தலைவரும் பாஜக எம்எல்ஏவுமான அசோக் கோயல், இந்த முடிவு அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்ல என்று விளக்கம் அளித்துள்ளார்.

தூய்மையின் செய்தி

தீமையின் மீது நன்மையின் வெற்றியை ஊக்குவிப்பதும், தூய்மையின் செய்தியை வலுப்படுத்துவதுமே இதன் நோக்கம் என்று அவர் கூறினார். இராவணனின் படையில் உள்ள அசுரர்களின் வரிசையில் கரப்பான் பூச்சியின் உருவபொம்பை ஒன்றும் சேர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும் சிஜேபி நடத்திய போராட்டங்களை தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.

சிஜேபி

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேலையற்ற இளைஞர்களை "கரப்பான்பூச்சிகள்" என விமர்சித்த சர்ச்சையை தொடர்ந்து ஆன்லைனில் இளைஞர்களால் நையாண்டி இயக்கமாக தொடங்கப்பட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நாளடைவில் ஜென் இசட் இளைஞர்களின் வெகுவான ஆதரவை பெற்று பேரியக்கமாக மாறியது.

முன்னதாக ஜூன், ஜூலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் தேர்வு முறைகேடுகள், வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராக சிஜேபி நடத்திய போராட்டம் தர்மேந்திர பிரதானை மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகச் செய்ய வழிவகுத்தது.

தற்போது எஸ்ஐஆர் மூலம் தேர்தல் முறைகேடு நடப்பதாக குற்றம்சாட்டி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்து சிஜேபி போராட்டத்தில் குதித்துள்ளது.

ஆனால் இந்த முறை சிஜேபி போராட்டத்தை டெல்லி காவல்துறை கடுமையாக ஒடுக்கி வருகிறது. ஜந்தர் மந்தரில் இனி போராடக்கூடாது என தடை விதித்தது.

கடந்த வாரம் சனிக்கிழமை ஜந்தர் மந்தரில் கூடிய ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இதனிடையே இன்று மாலை கண்டோன்மென்ட் பிளாசாவில் உள்ள சென்டர் பூங்காவில் சிஜேபி தேசிய கொடி பேரணி நடத்த உள்ளது.

ஆனால் அங்கு மக்கள் கூடுவதற்கும் டெல்லி போலீஸ் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

SCROLL FOR NEXT