பஞ்சாப் மாநிலம் ராஜ்புரா அருகே அமிர்தசரஸ் - நியூ ஜல்பைகுரி இடையே இயங்கும் கர்மபூமி எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பயணிகள் அனைவரும் நல்வாய்ப்பாகப் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்
பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டம் ராஜ்புரா - சிர்ஹிந்த் ரெயில்வே பிரிவில் உள்ள சராய் பஞ்சாரா ரெயில் நிலையம் அருகே இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது.
ரயிலின் எஞ்சினில் இருந்து 5-வதாக இருந்த பொதுப் பெட்டியில் முதலில் தீப்பிடித்து, பின்னர் பலத்த காற்று காரணமாக அடுத்தடுத்த பெட்டிகளுக்கும் பரவியது. இதில் 3 பொதுப் பெட்டிகள் முற்றிலும் சேதமடைந்தன; ஒரு பெட்டி பகுதி அளவில் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்மபூமி எக்ஸ்பிரஸ் அதிக எண்ணிக்கையிலான நீண்ட தூரப் பயணிகளை ஏற்றிச் செல்லும் முன்பதிவற்ற சேவை என்பதால், வடக்கு ரயில்வே உடனடியாக ரெயில் சேதத்தை காட்டிலும் பயணிகள் நிவாரணத்திற்கே முன்னுரிமை அளித்துள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் ரயிலில் சுமார் 1,500 பயணிகள் இருந்தனர். ரயிலின் தானியங்கி பாதுகாப்பு அமைப்பு செயல்பட்டதால் ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. லோகோ பைலட் மற்றும் கார்டு ஆகியோர் துரிதமாகச் செயல்பட்டு தீப்பிடித்த பெட்டிகளை ரயிலின் மற்ற பகுதிகளிலிருந்து தனியாகப் பிரித்தனர். இதனால் உயிர்ச் சேதமோ, யாருக்கும் காயங்களோ ஏற்படவில்லை
முதற்கட்ட விசாரணையின்படி, ரெயில் பெட்டியில் இருந்த மின்விசிறியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பாக உயர் மட்ட ரயில்வே விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவரும் அருகிலுள்ள ரெயில் நிலையத்திற்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டு, அவர்கள் தங்களின் இடங்களுக்குச் சென்றடைய மாற்று ரெயில் வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.